இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் தோனி. அவர் தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அவர் தலைமையில் டெஸ்ட்டில் நம்பர் 1 இடத்தையும் பெற்றது. சர்வதேச போட்டிகள் மட்டும் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் தலைமை தாங்கிய சிஎஸ்கே அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது.
களத்தில் தன்னுடைய கூலான கேப்டன்சி மூலம் வீரர்களை எளிமையாக கையாளும் தோனியை ரசிகர்கள் கேப்டன் கூல் என அழைத்து வருகின்றனர். இதை பல முன்னாள் வீரர்களும் ஆமோதித்து தோனியை கேப்டன் கூல் என அழைத்து வருகின்றனர். அதில் முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கரும் ஒருவர். ஆனால் இப்போது அவர் தோனியை கேப்டன் கூல் இல்லை என்றும் ஒரிஜினல் கேப்டன் கூல் வேறு ஒருவர் தான் என்றும் கூறியுள்ளார்.
கவாஸ்கர் கூறிய கேப்டன் கூல் வேறு யாரும் இல்லை 1983 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டனும் தன்னுடைய சக வீரருமான கபில்தேவை தான் அவர் ஒரிஜினல் கேப்டன் கூல் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள கவாஸ்கர் “1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது கபில் சிறப்பாக பந்துவீசினார், பேட்டிங் செய்தார் மற்றும் பீல்டிங் செய்தார். அவர் முன்னால் இருந்து வழிநடத்தினார் மற்றும் அவரது புன்னகை எங்கள் எல்லோருக்கும் தொற்றிக் கொண்டது. அதனால் அவர்தான் அசல் கேப்டன் கூல்,” என்று புகழ்ந்துள்ளார். மேலும் 1983 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது எங்களை டூத் பேஸ்ட் விளம்பரத்தில் சிரிப்பவர்களை போல சிரிக்கவைத்தது எனக் கூறியுள்ளார்.
தோனியைப் போலவே கபில்தேவ்வும் கூலான கேப்டன்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. 17 வயதிலேயே இந்தியாவுக்காக அறிமுகமாகி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் என இரண்டிலும் கலக்கியவர் கபில்தேவ். 25 வயதில் அவர் தலைமையில் இங்கிலாந்து சென்று இந்திய அணி கோப்பையை வென்றது மறக்க முடியாத வரலாற்று தருணமாகும்.
131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கபில்தேவ் எடுத்த 434 விக்கெட்கள் அப்போதைய அதிக விக்கெட் சாதனையாக இருந்தது. அதே போல ஒருநாள் போட்டிகளில் 225 போட்டிகள் விளையாடி 3783 ரன்களையும், 253 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் அவர் ஆடிய 175 ரன்கள் சேர்த்த இன்னிங்ஸ் அவரின் கிரீடத்தில் ஒரு சிறகாக உள்ளது.