இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 16-ஆவது ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்த ஒரு சீசனில் மட்டும் சுப்மன் கில் இதுவரை 3 சதங்களுடன் 851 ரன்களை குவித்து பிரமிக்க வைத்துள்ளார். இதனால் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் கிடைத்து விட்டார் என்று அனைவரும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் மட்டும் தற்போது சுப்மன் கில் விஷயத்தில் கொஞ்சம் பொறுமை காணுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக கவாஸ்கர், சச்சின், டிராவிட், கோலி போன்றவர்கள் ஏராளமான ரன்களை குவித்து சிறப்பாக விளையாடியவர்கள்.
அவர்களை போல சுப்மன் கில் இந்த தொடரில் 3 சதங்கள் அடித்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதை பார்க்கையில் அவர்களது பட்டியலில் இணைந்து விடுவார் என்று தான் தோன்றுகிறது. ஆனால் இந்த ஒப்பீட்டை நான் அவசரப்பட்டு கூறமாட்டேன். ஏனெனில் சுப்மன் கில் இளமையான வீரர் அவர் இன்னும் இதேபோன்று இரண்டு,மூன்று சீசன்கள் தொடர்ச்சியாக ரன்களை குவித்தால் மட்டுமே அந்த ஒப்பீட்டினை செய்ய முடியும்.
சுப்மன் கில்லிடம் திறமை இருக்கிறது. ஆனால் பவுலர்கள் அவரது குறையை கண்டறிந்து அவரை சோதனைக்கு உள்ளாக்குவார்கள். அதையும் மீறி அவரால் அடுத்து இரண்டு, மூன்று சீசன்கள் சிறப்பாக விளையாட முடிந்தால் நிச்சயமாக அவரை சிறந்த வீரர் என்று சொல்லலாம். அதோடு அவர் ஒருவேளை பார்மை இழந்து மீண்டும் எவ்வாறு திரும்புவார் என்பதையும் பார்க்க வேண்டும்.
ஏனெனில் இந்திய அணிக்காக வினோத் காம்ப்ளி போன்ற துவக்கத்தை யாரும் பெற்றிருக்க மாட்டார்கள். அறிமுகமான சில போட்டிகளிலேயே உச்சகட்ட பார்மையும், ஆட்டத்தையும் வெளிப்படுத்திய அவர் அதன்பிறகு சந்தித்த சரிவிற்கு பிறகு மீண்டு வரவேயில்லை எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு இளம்வீரரான சுப்மன் கில் தனக்கு கிடைத்திருக்கும் இந்த பெயர் மற்றும் புகழை எவ்வாறு கையாளுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: 2010 ஐ.பி.எல் பைனல்ல தோனி எங்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் இது தான். இதெல்லாம் செஞ்சி தான் சி.எஸ்.கே அப்போ கப் அடிச்சது – ரகசியம் பகிர்ந்த பத்ரிநாத்
இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணி இன்று பைனலில் மோத உள்ளது. அதில் சுப்மன் கில் ரன் குவிக்கும் மெஷின் போல ஆடுவார் என்பது குஜராத் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே வேலையில் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்த தோனி சிறப்பான ஒரு ஐடியா வைத்திருப்பார் என்று சென்னை அணியின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.