தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய வேளையில் அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய அணி பல கேப்டன் மாற்றங்களை சந்தித்த போதிலும் ஐசிசி தொடரை மட்டும் கைப்பற்றாமல் இருந்து வருவது அனைவரது மத்தியிலும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தோனிக்கு பிறகு எந்த ஒரு கேப்டனும் icc தொடரை கைப்பற்றாததால் அவ்வப்போது இந்திய கேப்டன்கள் மீது விமர்சனமும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறிவரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் மட்டும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஒருசில நேரம் அவர் கூறும் கருத்துக்கள் வீரர்களையும் வேதனை அடைய செய்யும் வகையில் இருந்து வருகிறது. ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா கபில் தேவ் கருத்துகள் வேதனை அளிப்பதாகவும், அதற்கு நேரடியாக தனது பதிலையும் அளித்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒரு கருத்தினை கபில் தேவ் கூறிள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணி கடைபிடித்து வரும் பேஸ்பால் ஆட்டம் அற்புதமானது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா விளையாடிய ஆஷஸ் தொடர்தான் சமீபத்தில் நான் பார்த்ததில் மிகச்சிறந்த தொடர். அவர்கள் எவ்வாறு வெற்றியை நோக்கி விளையாட வேண்டும் என்று ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார்களோ அதே போன்று அனைத்து அணிகளும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தியா மட்டுமல்ல அனைத்து அணிகளுமே அதேபோன்ற ஆட்டத்தில் தான் வெளிப்படுத்த வேண்டும் என்று யோசிக்கிறேன். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் நான்கு இடங்களுக்குள் வர வேண்டுமெனில் அதற்கு அதிர்ஷ்டம் தேவை. அனைத்து விஷயங்களும் உங்கள் வழியில் நடந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். முதலில் அரையிறுதிக்கு வந்தால் தான் அதன் பிறகு கோப்பையை கைப்பற்றுவது சாத்தியமாகும். எனவே முதலில் அரையிறுதிக்கான நான்கு இடங்களுக்குள் இந்திய அணி இடம் பெற விரும்பும் வேலையை பாருங்கள் என்று காட்டமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் வீரர்களின் காயம் குறித்து பேசிய அவர் : இந்திய அணியின் வீரர்கள் அதிகப்படியான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வீரருக்குமே எவ்வளவு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் வீரர்களின் வாழ்க்கையில் காயம் என்பது ஒரு பகுதி தான் என கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.