டிஎன்பில், கேபிஎல் போல உத்தர பிரதேசத்திலும் முதன்முறையாக யுபிடி20 லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் வரும் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, ரிங்கு சிங், நிதிஷ் ராணா என நட்சத்திர வீரர்கள் பலரும் விளையாடிவருகின்றனர்.
சமீபத்தில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற 17 ரன்கள் தேவைப்பட்ட போது, ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து மீரட் மேவ்ரிக்ஸ் அணியை வெற்றிபெற செய்தார் ரிங்கு சிங். அப்போது அணியின் வெற்றிக்கு ரிங்கு சிங் பேட்டிங்கில் உதவியது போல, தற்போது பவுலிங்கில் இளம்வீரர் கார்த்திக் தியாகி உதவியுள்ளார்.
யுபி டி20 தொடரின் 15வது போட்டியில் மீரட் மேவ்ரிக்ஸ் – லக்னோ ஃபால்கன்ஸ் அணிகள் மோதின. கான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மீரட் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. அணியில் அதிகபட்சமாக சுவஸ்திக் சிக்காரா 56, மாதவ் கவுசிக் 47 ரன்கள் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் ஒரு சிக்சருடன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து 192 ரன்கள் இலக்குடன் லக்னோ ஃபால்கன்ஸ் அணி களமிறங்கியது. இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் ஹர்ஷ் தியாகி 11 ரன்களுக்கு கார்த்திக் தியாகி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கார்த்திக் தியாகி தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து தந்து, ஆட்டம் மீரட் அணியின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவினார்
பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய லக்னோ அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கடைசி ஓவரை வீச கார்த்திக் தியாகி அழைக்கப்பட்டார். முதலிரண்டு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தந்த அவர், மூன்றாவது பந்தை நல்ல ஃபாஸ்டாக வீசினார். இதில் இன்சைட் எட்ஜ் ஆகி யாஷ் துல் போல்ட்டானார்.
பின் நான்காவது பந்தை வேகமாக யார்க்கர் வீசி கார்த்திகேய ஜெஸ்வாலை வந்த வழியிலேயே பெவிலியனுக்கு அனுப்பினார். பின் ஐந்தாவது பந்திலும் மீண்டும் ஒரு வேகமான யார்க்கர் வீசி விக்ராந்த் சவுத்ரியை போல்ட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அதுவும் மூன்றுமே போல்ட்தான். யுபி டி20யில் முதல் ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார் கார்த்திக் தியாகி.
இதனால் லக்னோ அணி 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், மீரட் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னதாக 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 4 ரன்களை டிஃபெண்ட் செய்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றி தேடி தந்தார். தற்போது ஐபிஎல்லில் இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.