ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக அறிமுகமானவர் கருண் நாயர். அவர் 2013 ஆம் ஆண்டு முதல் ரஞ்சி கோப்பை தொடரை ஆடி வந்தார். 2014 -2015 ஆண்டில் தமிழ்நாடு அணிக்கு எதிராக அவர் அடித்த 328 ரன்கள் தேர்வு குழுவையும், இந்திய ரசிகர்களையும் அவர் பக்கம் திரும்ப செய்தது.
அவரது முச்சத்திற்கான பலனாக இந்திய அணியில் வாய்ப்பும் கிடைத்தது. ரஞ்சி கோப்பையில் எப்படி முச்சதம் அடித்தாரோ அதே போன்று இந்திய அணிக்கு விளையாடியபோதும் முச்சதத்தை இவர் விளாசினார். கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 303 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இப்படி பல முறை அவர் தன் திறமையை நிரூபித்தும், இந்திய அணியில் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது துரதிஷ்டம் என்றே கூறவேண்டும். இந்திய அணிக்காக அவர் வெறும் 6 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இதுவரை விளையாடி உள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் இவருடைய இடம் ரகனேவிற்கு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இவர் அணியில் இடம்பெறவே இல்லை. ரஞ்சி கோப்பையை பொறுத்தவரை ஆரம்பம் முதலே இவர் கர்நாடக அணிக்காக மட்டுமே விளையாடி வந்தார். ஆனால் தற்போது இவர் விதர்பா அணிக்கு மாற உள்ளார்.
இந்த நிலையில் அவர் தற்போது முதன் முறையாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக விளையாடும் அவர், இன்று சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஒரு சதத்தை விளாசி உள்ளார். 144 பந்துகளை எதிர்கொண்ட அவர் 114 ரன்களை குவித்துள்ளார்.
இதுவே கவுண்டி கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் சதமாகும். அதே போல இந்த போட்டியில் அவர் ஒற்றை கையில் அடித்த சிக்சரும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்த போட்டியின் மூலம் அவர் முதல் தர கிரிக்கெட்டில் 6000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.