இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில வீரர்களுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் கர்நாடகாவிலும் மகாராஜா கோப்பை என்ற டி20 போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆனது வளர்ந்து வரும் கர்நாடக வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் மேலும் இத்தொடரின் மூலம் ஐபிஎல்லில் அந்த வீரர்கள் தேர்வு செய்யவும் நல்லதொரு வாய்ப்பாக இருந்து வருகிறது.
மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த மகாராஜா கோப்பையில் நேற்று இரண்டாவது அரை இறுதியானது நடைபெற்றது. இதில் மைசூரு வாரியர்ஸ் அணியும் குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணியும் மோதின. இதில் டாஸை வென்ற குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கார்த்திக் 41 ரன்ககளும், ரவிக்குமார் சமரத் 80 ரன்ககளும் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பிறகு களம் இறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டன் கருண் நாயர் மிகவும் அதிரடியாக ஆடி 107 ரன்களை விளாசி அசத்தினார். அந்த அணி 20 ஓவரின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்து இமாலய டார்கெட்டை எதிரணிக்கு நிர்ணயித்தது.
பின்பு களமிறங்கிய குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சேத்தன் 28 ரன்களும் அனீஸ் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய நோரோன்ஹா 34 பந்துகளில் 61 ரன்கள் குவித்து நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்கடுத்து களமிறங்கிய ஸ்மரன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த அமித் வர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடுத்த ஆட்டக்காரராக களம் இறங்கிய அபுல்ஹாசன் காலித் 29 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை அளித்த நிலையில், அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே அந்த அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. மைசூர் வாரியர்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டன் கருண் நாயர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒன்பதாவது ஓவரில் களம் இறங்கிய கருண் நாயர் முதல் இரண்டு ஓவர்களில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து நிதானமாக ஆடி வந்தார். பதினைந்தாவது ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசி தனது அதிரடியை தொடங்கினார்.
மொத்தம் 42 பந்துகளை சந்தித்த கருண்நாயர் 107 ரன்களை குவித்தார். இவர் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் என மைதானத்தின் அனைத்து பக்கத்திலும் ருத்ர தாண்டவம் ஆடி எதிரணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவர் அடித்த பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை மட்டும் கணக்கிட்டு பார்த்தால் 16 பந்துகளில் 82 ரன்கள் அடித்துள்ளார். இவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் மைசூர் வாரியர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.