2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல அணிகளின் உரிமையாளர்கள் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பிசிசிஐ நிர்வாகத்தினர் மற்றும் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் இணைந்து மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் பலருக்கும் வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான எண்ணிக்கையில் முரண்பாடு இருந்ததால் இந்த சந்திப்பு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பலரும் ஐந்து முதல் ஏழு வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான விதிமுறையை அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அத்தனை பேரை தக்க வைத்துக் கொண்டால் அது மெகா ஏலமாக இருக்காது என்றும் வழக்கம் போல ஒரு மினி ஏலமாக தான் இருக்கும் என்றும் குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பாலான உரிமையாளர்கள் மெகா ஏலத்தை நடத்த வேண்டாம் என்றும் அனைத்து வருடங்களிலும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக மினி ஏலம் நடத்தினாலே சரியாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பான சந்திப்பிற்கு பின்னர் இறுதி முடிவை பிசிசிஐ தரப்பு விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் இந்த சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பேரை மட்டும் தான் தக்க வைத்துக்கொண்டு கொள்ளவேண்டும் என்ற விதி கடந்த ஏலத்திற்கு முன்பாக இருந்தது. அதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் காவ்யா மாறன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல் இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாக வெளியான தகவல்கள் படி, ஒரு அணியை கட்டமைக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறிய அவர், இளம் வீரர்களை முதலிலேயே தேர்வு செய்து அவர்கள் மீது முதலீடு செய்து அவரை முதிர்ச்சி அடைந்த வீரராக்கவே நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
அப்படி இருக்கையில் குறைந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்வது ஒரு அணிக்கு நியாயமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக அபிஷேக் ஷர்மாவை தொடர்ச்சியாக ஆட வைத்து அவரை சிறந்த வீரராக மாற்றுவதற்கு ஹைதராபாத் அணிக்கு மூன்று ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தையும் விட காவ்யா மாதவன் தெரிவித்த மற்றொரு கருத்து தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு வீரர் அணியில் தேர்வான பின்னர் காயம் அல்லாமல் வேறு ஏதேனும் காரணத்திற்காக ஐபிஎல் தொடரில் ஆடாமல் இருந்தால் அவரை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு அணி ஏலத்தில் கடினமாக முயற்சி செய்து தான் ஒரு வீரரை தேர்வு செய்கிறது.
அப்படி இருக்கையில் அந்த வீரர் ஆடாமல் இருப்பது ஒரு அணியின் காம்பினேஷனை குலைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் உரிமையாளர் நெஸ் வாடியா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த தகவலும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.