இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல கோடி ரூபாய்களுக்கு வாங்கப்பட்ட சர்வதேச வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட உள்ளூர் வீரர்களின் ஆட்டம் அசத்தலாக இருந்தது.
அதே வேளையில் பல கோடிகளுக்கு ஏலம்போன நட்சத்திர வீரர்கள் பலரது ஆட்டமும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே இருந்தது. அதன் படி இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மினி ஏலத்தில் சாம் கரனை பஞ்சாப் அணி 18.50 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருந்தது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரது சிறப்பான செயல்பாடு காரணமாகவே இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது.
ஆனால் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் பேட்டிங்கில் 130 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டில் 276 ரன்கள் மட்டுமே குவித்தார். அதோடு பந்து வீச்சிலும் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக அவர் இந்த ஆண்டு பஞ்சாப் அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : சாம் கரனை நீங்கள் பார்த்தால் அவருடைய ஏலத்தின் மதிப்புக்கு ஏற்ப விளையாடவில்லை என்று தெரியும். ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரால் பாதிக்கு பாதி கூட அவரது தொகைக்கான நியாயத்தை வழங்க முடியவில்லை. அவரது ஆட்டம் இந்த தொடரில் பெரிய அளவில் யாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. எனவே நிச்சயம் அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு அவரை பஞ்சாப் அணி வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக தரமான வீரர்களை அந்த இடத்தில் தேர்வு செய்யும் என்று எதிர்பார்ப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மேலும் ஒரு வீரரை நம்பி பெரிய அளவில் தொகையை செலவிடுவதை தவிர்த்து அணிக்கு தேவைப்படும் ஆல் ரவுண்டர்களை இளம் வீரர்களாக குறைந்த தொகைக்கு வாங்கி அவர்களது திறனை முன்னேற்ற பஞ்சாப் அணியின் நிர்வாகம் முடிவெடுக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: சுப்மன் கில் ஆல்ரெடி தடுமாறி இருக்காரு. அவருக்கு இந்த மாதிரி ஒரு பால் போட்டா போதும், ஈஸியா காலி ஆகிடுவாரு. அதுக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் இத செய்யணும் – கிரேக் சேப்பல் கருத்து
கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் 2022 ஆம் ஆண்டு காயத்தில் இருந்து மீள்வதற்காகவும், உள்ளூர் கவுண்டி அணிக்காக விளையாடவும் முனைப்பு காட்டியதால் 2022 ஐ.பி.எல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை. பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் தனது பெயரை 18.50 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.