தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இனிமேல் பந்து வீச்சாளர்களுக்கு விலையே இருக்காது என்பது போன்று தான் போட்டிகள் நடந்து வருகிறது. மயங்க் யாதவ் உள்ளிட்ட ஒரு சில பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை இந்த ஐபிஎல் தொடரில் அளித்து வரும் அதே வேளையில் பல பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 263 ரன்கள் அடித்திருந்தது ஒரு தனி அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக இந்த சீசனில் மும்பை அணியை எதிர்கொண்டு இருந்த ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்து சாதனை புரிந்திருந்தது. இனி பல ஆண்டுகளுக்கு இந்த ரன்னை யாராலும் நெருங்க முடியாது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
அப்படி ஒரு சூழலில் இதே சீசனில் சரியாக ஒரு வாரம் கழித்து நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அந்த சாதனையை முறியடிக்கும் நிலையும் உருவாகி இருந்தது. ஆனாலும் ஒரு சில ரன்களில் இந்த வாய்ப்பை கோட்டை விட்டிருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதி இருந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 18 ரன்களில் அவுட்டாக பின்னர் கைகோர்த்த சுனில் நரைன் மற்றும் அறிமுக வீரர் ரகுவன்ஷி ஆகியோர் கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிகளுக்கு விரட்டிக் கொண்டிருந்தனர்.
39 பந்துகளில் ஏழு ஃபோர்கள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 85 ரன்களை சுனில் நரைன் எடுத்திருந்த நிலையில் அவருடன் கைகோர்த்து ஆடிய இளம் ரகுவன்சியும் 27 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஐந்து ஃபோர்களுடன் 54 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கடுத்து வந்த ரசல் 19 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க, கடைசி கட்டத்தில் வந்த ரிங்கு சிங் 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்ததால் ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் கொல்கத்தா அணி பதிவு செய்தது.
இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசியிருந்த இஷாந்த் சர்மா, ரசல் மற்றும் ராமன்தீப் சிங் விக்கெட்டை எடுத்ததுடன் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்திருந்ததால் ஹைதராபாத்தின் ரன்னை முறியடிக்கும் வாய்ப்பையும் கொல்கத்தா அணி தவற விட்டிருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் டேவிட் வார்னர் 18 ரன்களிலும், ப்ரித்வி ஷா 10 ரன்களிலும் அவுட்டாகினர்.
இன்னொரு பக்கம், மார்ஷ் மற்றும் அபிஷேக் போரேல் டக் அவுட்டாக, ரிஷப் பந்த் ஸ்டப்ஸ் ஆகியோரின் அதிரடி ரன் குவிப்பும் பெரிதாக கை கொடுக்கவில்லை. ரிஷப் பந்த் 55 ரன்களிலும், ஸ்டப்ஸ் 54 ரன்களிலும் அவுட்டாக, கொல்கத்தாவின் வெற்றியும் உறுதியானது. 18 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி, 166 ரன்கள் மட்டுமே எடுக்க கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.