ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது டெஸ்டில் நிறைய மாற்றங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுவதுடன் பிங்க் பந்தில் இந்திய அணி ஆடுவதும் ஒரு பெரிய சிக்கலாக இருக்கலாம் என தெரிகிறது.
சிகப்பு பந்தை விட பிங்க் பந்தில் நிறைய மாற்றங்கள் உருவாகும் என்பதால் அதில் அதிக அனுபவம் இல்லாத இந்திய வீரர்கள் எப்படி இதனை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியும் உள்ளது. இதற்காக மிக தீவிரமாக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வரும் அதே வேளையில் கே.எல் ராகுலின் பேட்டிங் பொசிஷன் என்ன என்பதும் குழப்பமாக உள்ளது.
முதல் டெஸ்டில் தொடக்க வீரராக ஆடிய ராகுல் இரண்டாவது டெஸ்டில் ரோகித் மற்றும் கில் ஆகியோர் திரும்ப உள்ளதால் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் திரும்ப ஆடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் தனது பேட்டிங் பொஷிஷன் உள்ளிட்ட சில கேள்விகள் தொடர்பாக பேசியிருந்த கே எல் ராகுல், “நான் ஆடப்போகும் இடம் எனக்கு தெரியும். ஆனால் பத்திரிகையாளர்களிடம் அதை பகிர வேண்டாம் என்றும் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் டெஸ்டின் முதல் நாள் வரையில் அல்லது கேப்டன் ரோஹித் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வருவது வரை காத்திருக்க வேண்டும். நான் ஆடும் லெவனில் இருக்க வேண்டும் என்று மட்டும் தான் விரும்புகிறேன். எந்த இடத்தில் என்னை ஆடும்படி அணி நிர்வாகத்தினர் கூறினாலும் நான் சென்று ஆடுவேன். அந்த சூழலுக்கு தேவைப்படும் ரன்களை என்னால் அடிக்க முடியுமா என்று தான் பார்ப்பேன். அதிர்ஷ்டவசமாக நான் நிறைய இடங்களில் பேட்டிங் செய்துள்ளேன்.
முன்பெல்லாம் என்னிடம் எந்த இடத்தில் ஆடுகிறீர்கள் என கேட்கும்போது மனதளவில் அது ஒரு சவாலாக இருந்தது. முதல் 20 – 25 பந்துகளை எப்படி ஆடுவது?. எந்த இடத்தில் அடித்து ஆட வேண்டும்? என்ற பயமும் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து வடிவிலும் ஆடிய அனுபவம் அதனை எளிதாகவும் மாற்றி உள்ளது. இது பிங்க் பந்தில் நான் ஆடப்போகும் முதல் டெஸ்ட் போட்டி. இதனால் அதில் ஆடிய அனுபவமுள்ள வீரர்களிடம் பேசி அந்த சூழலை புரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.
பயிற்சியிலும் பிங்க் பந்தில் உருவான மாற்றங்களை நான் கவனித்தேன். அதற்கேற்ப நானும் சூழலை உணர்ந்து கொண்டு ஆட முயற்சி செய்து வருகிறேன்” என கே எல் ராகுல் தெரிவித்துள்ளார்.