பொதுவாக பாக்ஸிங் டே டெஸ்ட் என்பது அனைத்து ஆண்டிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் நிச்சயம் மெல்போர்ன் மைதானத்தில் மோதுவது வழக்கமாக இருந்து வருகிறது. உலகம் எங்கிலும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் டிசம்பர் 25 ஆம் தேதி அமர்க்களமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கடுத்த நாளான டிசம்பர் 26 ஆம் தேதி ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பொது விடுமுறை ஆகும். இந்த தினத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி தான் பாக்ஸிங் டே கிரிக்கெட் என அறியப்படுகிறது. மேலும் விடுமுறை தினமான அன்று ஆஸ்திரேலிய நாட்டில் மெல்போர்ன் மைதானத்தில் நிச்சயம் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறும்.
இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல அணிகள் அவர்களை எதிர்கொள்ளும் சூழலில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் டிராபித் தொடரின் 4 வது டெஸ்ட் அங்கே நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தங்களது நான்காவது டெஸ்டில் வரும் 26 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் மோத உள்ளது.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இனி வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அவர்களுக்கு முக்கியமானதாகும். தொடரை கைப்பற்றுவதுடன் மட்டும் நின்று போகாமல் எந்த அணி அதிக வெற்றி பெறுகிறதோ அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் வாய்ப்புகள் உருவாகும். இப்படி நிறைய சாதகமான அம்சங்கள் இருப்பதால் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில் பலரால் அதிகம் உற்று கவனிக்கப்படும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆர்வமும் ரசிகர்களை இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது. இதனிடையே இந்த தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பேட்டிங்கில் இருந்து வரும் கே எல் ராகுல் இதற்கு முன்பு கடைசியாக ஆடிய இரண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் செய்த சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் சேர்த்திருந்தார் கே எல் ராகுல். இதே போல கடந்த 2023 ஆம் ஆண்டு அதே சவுத் ஆப்பிரிக்க அணியை பாக்சிங் டே டெஸ்டில் எதிர் கொண்டிருந்த ராகுல், அந்தப் போட்டியிலும் சதமடித்து அசத்தி இருந்தார். பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை மிக திறம்பட கையாண்டு வரும் ராகுல் மீண்டும் ஒருமுறை பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சதமடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.