இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல் பல நாட்களுக்கு முன்பே வெளியானதும் பல கிரிக்கெட் ரசிகர்களும் நினைத்தது ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி மட்டும் தான். இந்திய அணியில் கவுதம் கம்பீருடன் இணைந்து 2011 உலக கோப்பை உள்ளிட்ட தொடர்களில் ஆடியுள்ளார் விராட் கோலி.
தற்போது வரை சர்வதேச போட்டிகளில் கோலி ஆடி வர அவருக்கும் கம்பீருக்கும் இடையேயான மோதல் நிறைய இருந்து வந்தது. அதிலும் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வீரரான விராட் கோலி, லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கம்பீருடன் சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான விஷயங்கள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொல்கத்தா அணியின் ஆலோசராக கம்பீர் இணைய அவரும், கோலியும் இணைந்து சிரித்துக் கொண்டே பேசிய விஷயங்கள் அவர்களுக்கு இடையே இருந்த சண்டை உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தது.
இது பற்றி பேசி இருந்த கம்பீர், நானும் விராட் கோலியும் எப்போதும் சண்டை போடுவதையே நிறைய ஊடகங்கள் விரும்புகிறது என்றும் அதிலிருந்து ஏதாவது செய்திகளை வைத்து வைரல் செய்ய நினைக்கிறது என்றும் பதிலடி கொடுத்திருந்தார். ஆனாலும் கம்பீர் மற்றும் கோலிக்கு இடையே ஏதோ சிறிய சண்டை இருப்பதாகவே தொடர்ந்து தகவல் பரவி வந்தது. இதனிடையே, தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் கவுதம் கம்பீர் பொறுப்பேற்க உள்ளார்.
இதனால் கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் இந்திய அணிக்குள் சண்டை நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதனிடையே கம்பீருடன் முன்பிருந்த பிரச்சனைகள் எதுவும் சர்வதேச போட்டிகளில் பிரதிபலிக்காது என்றும் கோலி பிசிசிஐக்கு வாக்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராகுல் டிராவிட்டிடம் இருந்ததைப் போல கம்பீரிடமும் நடந்து கொள்ள கோலி முடிவு செய்துள்ளதாகவும் பயிற்சியாளராக அவரது திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கோலிக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆட வேண்டும் என்று கம்பீர் கேட்டுக் கொண்டதால் தங்களின் ஓய்வையும் சீக்கிரமாகவே முடித்து விட்டு இரண்டு பேரும் இந்திய அணியுடன் இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.