ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலே திடீரென பாதியில் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் டெஸ்டில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லி விடலாம்.
2 வது டெஸ்டில் களமிறங்கிய அஸ்வினுக்கு பதிலாக மூன்றாவது டெஸ்டில் ஆடிய ஜடேஜா, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மேலும் இந்திய அணி தோல்வி அடையும் நிலையில் இருந்த இந்த போட்டி மழை காரணமாக டிராவிலும் முடிந்திருந்தது. இதற்கிடையே, திடீரென அஸ்வினை விராட் கோலி கட்டித் தழுவிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது.
இதனால், அஸ்வின் ஓய்வு முடிவை எடுத்து விட்டார் என்றும் ஊகமாக தகவல்கள் பரவி வர, அவரும் சில மணி நேரத்தில் அதனை உறுதி செய்திருந்தார். சச்சினுக்கு பின்னர் அஸ்வின் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்த போது தான் ரசிகர்கள் அதிகம் கலங்கி போயிருந்தனர்.
அஸ்வினின் முடிவு பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வர, இன்னொரு பக்கம் அஸ்வினை போல கோலி, ரோஹித் உள்ளிட்டோரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் தங்களது ஓய்வினை டெஸ்ட் போட்டிகளில் அறிவிக்க வேண்டுமென குறிப்பிட்டு வருகின்றனர்.
இதனிடையே, கோலி எப்போது ஓய்வு முடிவை எடுப்பார் என்பது பற்றி அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். “விராட் கோலி தனது கிரிக்கெட் பயணத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை தற்போது வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்டில் சதமடித்த அவர் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் இன்னும் இரண்டு சதங்களை அடிப்பார் என்று நான் நம்புகிறேன்.
ஒரு கிரிக்கெட் வீரர் தனது ஆட்டத்தை ரசித்து ஆடும் போது அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். கோலியின் தற்போதைய ஃபார்ம் ஒரு பெரிய கவலையே கிடையாது. அவருக்கு இக்கட்டான சூழலில் எப்படி ஆடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தெரியும். இந்த வயதிலும் அவர் ஃபிட்டுடன் இருப்பதால் ஓய்வு பெறுவதற்கான நேரம் வரவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
விராட் கோலி இன்னும் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவார் என்று நான் நம்புகிறேன். மேலும் 2027 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரிலும் அவர் இடம் பெறுவார். 10 வயதாக இருக்கும் போதே விராட் கோலியை எனக்கு தெரியும். 26 ஆண்டு பழக்கத்தை வைத்து கூறும்போது இன்னும் அவரிடம் நிறைய கிரிக்கெட் மீதம் இருப்பதையே நான் கருதுகிறேன்” என சிறு வயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா குறிப்பிட்டுள்ளார்.