ஐபிஎல் தொடர் முடிந்துவிட்ட நிலையில் தற்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் டி20 உலக கோப்பை மீது தான் உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணிகளும் இந்த டி 20 உலக கோப்பையை வெல்வதற்கான முயற்சியில் இறங்கவும் தயாராகிவிட்டனர். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் வைத்து உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதையும் பலர் கணித்து வருகின்றனர்.
அதில் பெரும்பாலான பிரபலங்களின் பார்வை இந்திய அணி மீது உள்ள நிலையில் அனைவருமே அவர்கள் நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் காணுவார்கள் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். பலர் கணித்த அரையிறுதி அணிகளில் ஆஸ்திரேலியாவே இடம் பெறாமல் போனாலும், இந்தியாவின் பெயர் அனைவரது லிஸ்டிலும் உள்ளது பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை இந்தியாவில் வைத்து நடந்த போதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் ஆடியிருந்த வீரர்கள் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை அளித்திருந்தது. ஆனால் இந்த முறை டி20 உலக கோப்பைக்காக சிறப்பான அணியை இந்தியா தயார் செய்துள்ள நிலையில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே தெரிகிறது.
இதனிடையே இந்திய அணியை தற்போது ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்து வழிநடத்தி வரும் நிலையில் அடுத்த பயிற்சியாளருக்கான முடிவும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் பெயர் இடம்பெற்றதாக தகவல் வெளியாக, அவை உண்மையில்லை என்பதும் பின்னர் தெரிய வந்தது.
இதனிடையே கவுதம் கம்பீர் தான் பயிற்சியாளராக மாறுவார் என தகவல் ஒன்றும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் விராட் கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா, தோனியை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“பயிற்சியாளராக யார் இருந்தாலும் அவர் இந்தியராக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதனால் தோனி நிச்சயம் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் நிறைய கிரிக்கெட் ஆடியுள்ளதுடன் மட்டும் இல்லாமல் நிறைய பெரிய தொடர்களிலும் இந்திய அணியை தலைமை தாங்கியுள்ளார்.
அதே போல, தோனி கேப்டனாக ஆட வந்த சமயத்தில் நிறைய பெரிய வீரர்கள் அணியில் இருந்த போதும் அவர்களை சிறப்பாக தலைமை தாங்கி இருந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டால், தற்போதுள்ள இந்திய அணியையும் அவரால் ஒரு பயிற்சியாளராக நிச்சயம் சிறப்பாக கையாள முடியும்” என ராஜ்குமார் ஷர்மா கூறியுள்ளார்.