பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 இன் 43 ஆவது போட்டி நடைபெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகொடுக்கும் இடத்திலேயே கம்பீருக்கும், கோலிக்கும் இடையே ஒரு சீண்டல் நடந்தது. பின்னர் லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் கோலியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை வந்து கம்பீர் கையைப் பிடித்து அழைத்து சென்றார்.
கம்பீரின் இந்த செயல் கோலியை வெகுவாகக் கோபப்படுத்தியது. இதையடுத்து இருவரும் ஆக்ரொஷமாக வாக்குவாதம் செய்து கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கையாக அவர்களுக்கு போட்டி கட்டணம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விரும்பத் தகாத நிகழ்வு அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தியது ராகுல்தான். அவருக்கு இணையத்தில் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பீல்டிங் செய்யும் போது இந்திய தொடக்க ஆட்டக்காரரும் எல்எஸ்ஜி கேப்டனுமான கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதல் இரண்டாவது ஓவரிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக க்ருனாள் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார். இதன் காரணமாக ராகுல் நம்பர் 11 இல் பேட்டிங் செய்தார், இருப்பினும் அவரால் விக்கெட்களுக்கு இடையே ஓட முடியவில்லை.
இந்நிலையில் கம்பீரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கோலி, கே எல் ராகுலிடம் காயம் பற்றி விசாரித்து “சீக்கிரம் குணமாகி வா” என பாசத்தோடு நலம் விசாரித்தார். அது போல சிராஜும் ராகுலிடம் நலம் விசாரித்தார். ஆக்ரோஷமாக சண்டை போட்டாலும், கோலி அதையெல்லாம் மைதானத்துக்கு வெளியே எடுத்து வருவதில்லை.
சக வீரர்களோடு மரியாதையோடுதான் பழகி வருகிறார். 2018 ஆம் ஆண்டு தற்போதைய கொல்கத்தா கேப்டனாக இருக்கும் நிதிஷ் ராணா தன் விக்கெட்டை வீழ்த்தி ஆக்ரோஷமாக ஒரு வார்த்தை சொல்லி பேசியபோதும், அதை கோலி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. போட்டி முடிந்ததும் தன்னுடைய பேட் ஒன்றை பரிசாகக் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தினார். கோலிக்கு இப்படி ஒரு முகமும் இருக்கு என ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.