நேற்று ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி அபாரமாக ஆடி 62 பந்துகளில் சதமடித்தார். ஆனால் சதமடித்த அடுத்த பந்தே அவர் அவுட் ஆனார். அவரது இந்த இன்னிங்ஸில் 12 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடக்கம். ஐபிஎல் போட்டிகளில் கோலி, அடிக்கும் ஆறாவது சதம் இதுவாகும். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்லுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த அபாரமான சதத்தின் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட கோலி தன் மீதான விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு என பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் “இந்த போட்டியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளும் போது ஸ்பெஷலான ஒரு இன்னிங்ஸ். நாங்கள் ஒரு நல்ல திடமான தொடக்கத்தை விரும்பினோம். ஆனால் அந்த தொடக்கம் 172/0 ஆக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் டு பிளஸ்சியும் நானும் இந்த சீசனில் நன்றாக விளையாடினோம். ஃபாஃப் வேறு லெவலில் இருக்கிறார்.
கடந்த சில போட்டிகளாக நான் வலைப் பயிற்சியில் விளையாடும் தரத்துக்கு என்னால் களத்தில் விளையாட முடியவில்லை. நான் இன்று முதல் பந்திலிருந்தே பவுலர்களை அடித்து ஆடவேண்டும் என விரும்பினேன். இந்த சீசன் முழுவதும் என்னுடைய அனுகுமுறை இதுவாகதான் இருந்தது.
நான் வெளியில் இருந்து பேசப்படும் கருத்துகளை (விமர்சனங்களை) பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனக்கு போட்டிகளை வென்று கொடுப்பதுதான் முக்கியம். அதை நான் பலமுறை செய்திருப்பதாக நினைக்கிறேன். முக்கியமான போட்டியில் சிறப்பாக விளையாடுவது கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. நான் அதிகளவில் பேன்சியாக ஷாட்களை விளையாடுவதில்லை.
இதையும் படிக்கலாமே: RCBயின் வெற்றியால் தவிக்கிறதா மும்பை? புள்ளிப்பட்டியல் என்ன சொல்கிறது?
பேன்சி ஷாட்களின் மூலம் விக்கெட்களை எளிதாக இழப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஐபிஎல் முடிந்ததும் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் வருகிறது. அதனால் நான் என் இயல்பான ஷாட்களை விளையாட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். தற்போதைய காலத்தில் டி 20 போட்டிகளில் இளம் வீரர்கள் புதிது புதிதாக ஷாட்களை உருவாக்கி பவுண்டரிகளை விளாசி வருகின்றனர். ஆனால் அந்த வீரர்கள் நிதானமாக விளையாடக் கூடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.