நேற்று குஜராத் அணிக்கெதிரான தங்களது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது. இப்போது குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்கின்றன.
நேற்றைய போட்டியில் கோலி 60 பந்துகளில் சதமடித்தார். பெங்களூர் அணி பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்த நிலையில் நிதானமாக ஆடி முதல் 35 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அடுத்த 25 பந்துகளில் சதத்தைக் கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்லிடம் இருந்து பெற்றுள்ளார் கோலி.
இதுவரை கோலி 7 ஐபிஎல் சதங்களை அடித்துள்ளார். கிறிஸ் கெயல் 6 சதங்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார். அதற்கடுத்த இடத்தில் ஜோஸ் பட்லர் 5 சதங்களோடு உள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் கோலி அடித்த சதம் மற்றொரு சிறப்பையும் பெற்றுள்ளது. இந்த போட்டிக்கு முன்பு SRH அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் கோலி சதமடித்திருந்தார்.
இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் கோலி. இதற்கு முன்னர் ஷிகர் தவான் 2020 ஆம் ஆண்டும், ஜோஸ் பட்லர் 2022 ஆம் ஆண்டும் இது போல இதே சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இத்தகைய பெருமையுள்ள இன்னிங்ஸ்களைக் கோலி ஆடிய போதும், அணியின் மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்தும் பவுலர்களிடம் இருந்தும் போதுமான ஆதரவு கிடைக்காததால் அவரின் சதம் வீணானது. இதன் மூலம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்சிபியின் 15 ஆண்டு கனவு இன்னும் கனவாகவே உள்ளது. இந்த தோல்வி ஆர்.சி.பி ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே: RCB-யின் தோல்வியால் கோலியையும் RCB-யையும் பங்கமாய் கலாய்க்கும் வகையில் பதிவு போட்ட நவீன் உல் ஹக். செம கடுப்பான கோலி ரசிகர்கள்
தோல்வி குறித்து ஆர்சிபி கேப்டன் பாப் டூ பிளெஸ்ஸிஸ் பேசுகையில் கூட கோலி சிறப்பான ஒரு ஆட்டம் குறித்து வேகவாக பாராட்டி பேச இருந்தார். அதே சமயம் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.