இந்த சீசனில் கொல்கத்தா அணி தான் ஐபிஎல் கோப்பையை வெல்ல போகிறது என சத்தியம் அடித்து சொல்லி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் கடைசி மூன்று இடங்களுக்கான போட்டி மிக பயங்கரமாக இருக்கும் என்று தெரிகிறது.
இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் தான் பிளே ஆப்பிற்கு முன்னேறி உள்ளது. அதிலும் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை அவர்கள் உறுதி செய்து விட்ட நிலையில், மற்ற மூன்று இடங்களுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் என ஆறு அணிகள் மூன்று இடங்களுக்காக போட்டி போட உள்ளது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் ஒரு போட்டியை வென்றாலே அவர்கள் முதல் இரண்டு இடங்களில் ஒன்றைப் பிடித்து விடலாம். இதற்கிடையே பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி, டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதும் போட்டி என ஒவ்வொன்றும் தூள் கிளப்பும் என்றும் தெரிவதால் அனைத்து அணிகளும் வெற்றியை முடிந்த அளவுக்கு பெறுவதற்காக அனைத்து முயற்சிகளிலும் இறங்குவார்கள் என்றும் தெரிகிறது.
இதனிடையே சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதி இருந்த போட்டி மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி கிடைக்க கொல்கத்தா அணி முதல் இரண்டு இடங்களில் ஒன்றை உறுதி செய்து குவாலிஃபயர் ஒன்றிற்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆனால் அதே வேளையில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஒரு புள்ளியை பெற்றதன் காரணமாக பிளே ஆஃப் வாய்ப்பை கடந்த 3 ஆண்டுகளில் முறையாக இழந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் தான் கொல்கத்தா இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் மிக உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா அணி இதற்கு முன்பு கோப்பையை வென்ற இரண்டு சீசன்களிலும் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பிடித்திருந்தது. 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் அவர்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்ததுடன் அந்த சீசனில் கோப்பையையும் கைப்பற்றி இருந்தனர்.
தொடர்ந்து தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் இரண்டு இடங்களில் ஒன்றை உறுதி செய்துள்ள கொல்கத்தா அணி, இந்த முறை அடுத்தடுத்த போட்டிகளில் வென்று முன்பு முதல் இரண்டு இடங்களை பிடித்த போது என்ன செய்தார்களோ அதனை மீண்டும் செய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.