ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதினால் எந்த அளவுக்கு போட்டியில் விறுவிறுப்பும், பரபரப்பும் இருக்கமோ அதே அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போட்டி தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுவது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான சரித்திரம் வாய்ந்த சம்பவங்களின் பின்னணியும் உள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்து போட்டியில் இரு அணிகளும் மோதிக் கொண்டது. இதில் ஒரு முறை கூட பெங்களூர் அணி வென்றதில்லை. அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோராக பெங்களூர் அடித்த 49 ரன்கள் சுற்றி இன்று வரையிலும் பல்வேறு மீம்ஸ்களும், விமர்சனங்களும் இருந்து வருகிறது. இதற்குக் காரணமும் கம்பீர் தலைமையில் ஆடி இருந்த கொல்கத்தா நைட்ன் ரைடர்ஸ் தான்.
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசராக கம்பீர் இணைந்துள்ள நிலையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது.
தொடக்க வீரரான விராட் கோலி முந்தைய இரண்டு போட்டிகளை போல இந்த முறையும் சிறப்பாக நிலைத்து நின்று அடி ரன் சேர்த்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 59 பந்துகளில் நான்கு ஃபோர்கள் மற்றும் நான்கு ஃசிக்ஸர்களுடன் 83 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு பக்கபலமாக மேக்ஸ்வெல், கிரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர்.
பெங்களூர் மைதானத்தில் 183 என்ற இலக்கு சற்று குறைவாக இருந்ததையடுத்து தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் முதல் 6 ஓவர்களிலேயே 85 ரன்கள் எடுத்திருந்தனர். நரைன் 20 பந்துகளில் இரண்டு ஃபோர்கள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பிலிப் சால்ட் 30 ரன்கள் எடுத்து அவுட்டாக, 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஈடுபட, 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார் வெங்கடேஷ் ஐயர். அது மட்டுமில்லாமல், 17 வது ஓவரிலேயே கொல்கத்தா அணி இலக்கை எட்ட, சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடர்ந்து 6 வது முறையாக ஆர்சிபி அணியை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது.