தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரின் தலைமையிலும் நிறைய இந்திய வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பு பெற்றதுடன் மட்டுமில்லாமல் தங்கள் திறனை நிரூபிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தனர். அதிலும் தோனி சில வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடாத போதிலும் அவர்களுக்கான வாய்ப்பை புறக்கணிக்காமல் தொடர்ந்து அணியில் இடம் கொடுத்ததுடன் அவர்களிடம் இருந்த தவறுகளை சரி செய்யவும் வாய்ப்பு கொடுத்திருந்தார்.
இந்த பொன்னான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தி முன்னணி வீரர்களாகவும் கிரிக்கெட் அரங்கில் மாறி இருந்தனர். அந்த வகையில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தற்போது சிறந்து விளங்குவதற்கு தோனியின் பங்கும் முக்கிய காரணமாக இருந்து வந்தது. விக்கெட் கீப்பராக தோனி திட்டங்களை போட, அதனை அப்படியே செய்து தனது பந்து வீச்சுத்திறனால் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்த குல்தீப் யாதவ், தோனியை பாராட்டி பலமுறை தனது கருத்துக்களையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த பின்னர், குல்தீப் யாதவுக்கான வாய்ப்பு கிடைக்காமல் போக இந்திய அணியில் அவரது எதிர்காலமே கேள்விக்குறியானது போல இருந்தது. தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையில் மீண்டும் இந்திய அணியில் நுழைந்திருந்த குல்தீப் யாதவ், தற்போது உலக கோப்பை போட்டியிலும் சில வெற்றிகள் பெறுவதற்கு முக்கிய காரணமாக தனது பந்து வீச்சின் மூலம் அமைந்திருந்தார்.
அப்படி ஒரு சூழலில் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரில் யாருடைய கேப்டன்சி சிறந்தது என்பது பற்றி சில கருத்துக்களை குறிப்பிட்டும் கூறியுள்ளார் குல்தீப் யாதவ். “இரண்டு பேருக்குமே வித்தியாசமான கிரிக்கெட் காலம் உள்ளது. இருவரும் தங்களது சூழலில் அணிகளை வழிநடத்த வாய்ப்பு கிடைத்து அதனை மிகச் சிறப்பாகவும் அவர்கள் செய்திருந்தனர்.
தோனி மூன்று ஐசிசி டைட்டில்களை வென்று கொடுத்துள்ளார். ரோஹித் ஷர்மாவும் மிகச் சிறப்பாக தனது அணியை வழி நடத்தி வருகிறார். ஐபிஎல் டைட்டில்களை வென்றுள்ளதுடன் மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், உலகக் கோப்பை இறுதி போட்டி உள்ளிட்டவற்றிலும், பின்னர் டி20 உலக கோப்பையை வெல்லவும் அவர் மிக அற்புதமாக இந்திய அணியை வழிநடத்தி இருந்தார்.
அனைவருமே அணியை நன்றாகத்தான் வழி நடத்தி இருந்தனர். இதனால் இதை ஒப்பீடு செய்வதற்கு எதுவுமே கிடையாது. ஒருவர் தலைமை தாங்கும் பொறுப்பு கிடைத்தால் அவர்கள் அணியை வெற்றி பெற வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி முன் நின்று வழி நடத்துவார்கள்” என குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.