இந்தியாவில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்கவுள்ள பத்து அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணியானது வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.1 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 263 ரன்கள் மட்டுமே குவித்தது.
பின்னர் 264 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 42 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 264 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக விளையாடிய அந்த அணியின் துவக்க வீரரான குஷால் பெரேரா 24 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் குவித்தார்.
அவ்வேளையில் காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். ஏற்கனவே இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் பலர் காயமடைந்து இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ள நிலையில் முன்னணி துவக்க வீரரான இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணியின் நிர்வாகத்திடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் குஷால் பெரேரா காயமடைந்த உடனே மைதானத்திலிருந்து பிசியோதெரபி உதவியுடன் வெளியேறினார். நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 39 ரன்கள் சராசரியுடன் 273 ரன்கள் குவித்து இருந்தார்.
இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் ஏற்கனவே உலகக்கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது இவரது காயமும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவரது காயம் குறித்த முழு தகவல் வெளியாகவில்லை என்றும் நிச்சயம் அவர் இந்த காயத்திலிருந்து மீண்டு வருவார் என்ற தகவலும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.