ஹைதராபாத் நகரில் இன்று துவங்கிய 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் 8-ஆவது ஆட்டத்தில் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. இந்த தொடரில் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி அடுத்த வெற்றியை காணும் முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது. அதேபோன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வேற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
இப்படி இரண்டு அணிகளுமே இந்த போட்டியின் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதனால் இந்த போட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி இலங்கை அணி தங்களது ஆட்டத்தை ஆரம்பித்த வேளையில் போட்டியின் இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் அணியின் எண்ணிக்கை 5-ஆக இருந்தபோது துவக்க வீரர் குசால் பெரேரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
இதனால் ஆரம்பத்திலேயே சறுக்களை சந்தித்த இலங்கை அணியை துவக்க வீரர் பதும் நிசங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பான முறையில் மீட்டெடுத்தனர். குறிப்பாக இரண்டாவது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இரண்டாவது விக்கெட்டாக பதும் நிசாங்கா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் சதீரா சமரவிக்கமா உடன் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு மட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை விளாசி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இவரின் விக்கெட்டை எடுக்க பாகிஸ்தான் பவுலர்கள் மிகவும் திணறினர்.
இறுதியில் 29-ஆவது ஓவரின் கடைசி பந்தில் 77 பந்துகளை சந்தித்திருந்த குசால் மெண்டிஸ் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 122 ரன்கள் குவித்திருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அடித்த பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை மட்டும் கணக்கிட்டு பார்த்தால் 20 பந்துகளில் 92 ரன் எடுத்துள்ளார்.
ஒருவேளை அவர் சற்று நிதானித்து விளையாடியிருந்தால் 200 ரன்களை கூட இந்த போட்டியில் அடித்திருக்க ஒரு அற்புதமான வாய்ப்பு இருந்திருக்கும் இருந்தாலும் குசால் மெண்டிசின் இந்த சிறப்பான சதம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.
ஏற்கனவே உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த குசால் மெண்டீஸ் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளது அவரின் பலத்தை வெளிக்காட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இலங்கை அணியானது 47 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்களை குவித்துள்ளது. இதனால் நிச்சயம் இந்த போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு 350 ரன்கள் வரை இலக்கினை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. அதோடு இந்த போட்டியில் குசால் மெண்டிஸ்சுடன் சேர்ந்து சதீரா சமரவிக்ரமாவும் சதம் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.