பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் போட்டியானது இன்று ஹைதராபாத் நகரில் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலபரீட்சை நடத்தினர். அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது.
குறிப்பாக இலங்கை அணி 5 ரன்களுக்கே முதல் விக்கெட்டை இழந்திருந்தாலும் மூன்றாவது வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் ஒருபுறம் அதிரடியாக விளையாட இலங்கை அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. குறிப்பாக இரண்டாவது விக்கெட்டுக்கு பதும் நிசாங்காவுடன் இணைந்த அவர் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு சமர விக்கிரமாவுடன் ஜோடி சேர்ந்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இப்படி அசத்தலான இரண்டு சதங்கள் பார்ட்னர்ஷிப்பில் இருந்த குசால் மெண்டிஸ் இறுதியாக 77 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 122 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்தாலும் சமர விக்கிரமா ஒருபுறம் 89 பந்துகளில் 108 ரன்கள் குவிக்கவே இலங்கை அணியானது 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குசால் மெண்டிஸ் ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனைகளாவது : உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை அவர் இந்த போட்டியின் மூலம் படைத்துள்ளார்.
அந்தவகையில் இந்த போட்டியில் குசால் மெண்டிஸ் 65 பந்துகளை சந்தித்தபோது சதம் விளாசி இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக (122) அதிக ரன்களை குவித்த வீரராகவும் அவர் இன்று சாதனை படைத்தார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி சார்பாக சதம் அடித்த 6 ஆவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதோடு ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிகபட்ச ரன்களை அடித்த இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சங்ககாராவை (112) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இப்படி பல சாதனைகளை அவர் இந்த ஒரே போட்டியின் மூலம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.