உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டார்க் என்று முன்னணி வீரர்கள் பலரும் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மார்கோ யான்சன் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் பவுமா, தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சிறப்பாக ஆடிய பவுமா 114 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக 49 ஓவ்ர்களில் தென்னாப்பிரிக்கா அணி 222 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 223 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தது. 56 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தனர்.
இதனிடையே களமிறங்கிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் எதிர்கொண்ட 2வது பந்திலேயே தலையில் அடி வாங்கினார். இதன் காரணமாக ரிடையர்ட் ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார். இதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.
இருப்பினும் எதிர்முனையில் இருந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் லபுஷேன் – அகர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பெரும்பாலான ஸ்ட்ரைக் லபுஷேன் வைத்துக் கொண்டார். சிறப்பாக ஆடிய அவர், அரைசதம் விளாசினார்.
Super Sub Labuschagne's CV
About me: Specialises in coming on as a substitute to win games for Australia 😉#SAvAUS pic.twitter.com/wjzcYQrOa6
— FanCode (@FanCode) September 8, 2023
இறுதியாக 223 ரன்கள் இலக்கை எட்டி லபுஷேன் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத லபுஷேன், மாற்று வீரராக களமிறங்கி 80 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஷஸ் தொடரிலும் லபுஷேன் மாற்று வீரராக களமிறங்கியே டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.