வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் வரலாற்றின் 100வது போட்டியாக அமைந்ததை பாராட்டும் வகையில் ஜாம்பவான் ப்ரைன் லாரா இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நினைவு பரிசு வழங்கினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் பலவீனமாக இருந்தாலும் 2010க்கு முன்பு வரை உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து நிறைய மறக்க முடியாத போட்டிகளையும் அரங்கேற்றியுள்ளது.
அந்த வரிசையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆண்ட்டிகுவா நகரில் நடைபெற்ற ட்ராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டியை மறக்கவே முடியாது. அந்த சுற்றுப்பயணத்தில் ஜாம்பவானாக இருந்த பிரைன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணியை கேப்டனாக வழி நடத்திய நிலையில் நீல முடிகளுடன் விக்கெட் கீப்பராக அப்போது தான் எம்எஸ் தோனி அறிமுகமாகியிருந்தார். அந்த சூழ்நிலையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 241 ரன்கள் எடுக்க பதிலுக்கு வெஸ்ட் இண்டீஸ் 371 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா வாசிம் ஜாபர் 212 ரன்கள் எடுத்த உதவியுடன் 450 ரன்கள் கடந்தது.
நொறுக்கிய தோனி:
அந்த சமயத்தில் டிக்ளர் செய்ய வேண்டும் என்பதால் அதிரடியாக விளையாடுமாறு கேப்டன் டிராவிட் சொல்லி அனுப்பியதால் தேவ் முகமது வீசிய 151வது ஓவரின் 2, 3, 4 ஆகிய பந்துகளில் இறங்கி இறங்கி வந்து அடுத்தடுத்த பிரம்மாண்ட ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட தோனி ரசிகர்களை மகிழ்வித்து 5வது பந்தில் சிங்கிள் எடுத்து தன்னுடைய அரை சதத்தை எட்டினார். அத்தோடு நிற்காமல் அதே பவுலர் மீண்டும் வீசிய ஓவரில் அடுத்தடுத்த 2 முரட்டுத்தனமான ஹெலிகாப்டர் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அப்போதும் நிற்காத தோனி அதற்கடுத்த பந்தில் லெஃக் சைட் திசையில் மிரட்டல் ஹாட்ரிக் சிக்சரை பறக்க விட்டதால் “என்னய்யா இப்படி அடிக்கிறார்” என்ற வகையில் பிரைன் லாரா வாயடைத்து போய் நின்றார். அதே வேகத்தில் அடுத்த பந்தையும் தோனி சிக்ஸராக அடிக்க முயற்சித்த போது டேரன் கங்கா கேட்ச் பிடித்த போதிலும் அவருடைய கால் பவுண்டரி எல்லையில் பட்டது. அதை சோதித்த போது அந்த காலத்தில் இருந்த டெக்னாலஜி உயர்தரமாக இல்லாததால் தீர்ப்பு வழங்க முடியாமல் 3வது நடுவர் திண்டாடினார்.
அப்போது அருகில் அந்த லாரா அடித்தது போதும் கிரௌன்டை விட்டு வெளியேறுங்கள் என்று பேசியும் அதை ஏற்காமல் தோனி 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 69* (52) ரன்களுடன் களத்தில் நின்றார். இறுதியில் அனைத்து குழப்பங்களுக்கும் ஒரே தீர்வாக கேப்டன் ராகுல் டிராவிட் 521/6 ரன்களில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இருப்பினும் அந்த சமயத்தில் லாரா தம்மை களத்திலிருந்து வெளியேற சொன்னார் என்று போட்டியின் முடிவில் அன்றைய நாளில் நடந்த பின்னணியை தோனி விவரித்தது பின்வருமாறு.
“பிரையன் என்னிடம் வந்து “நான் என்னுடைய வீரர்களை தலைமை தாங்கி அவர்களுக்கு பொறுப்பாக இருக்கிறேன். அந்த வகையில் என்னுடைய வீரர்கள் அது அவுட் தான் என்று என்னிடம் உண்மையை சொல்கிறார்கள். எனவே நீங்கள் தற்போது களத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறினார். அப்போது நாங்கள் வெளியேறலாம் என்று நினைத்தாலும் பந்தை பிடித்த டேரன் கங்கா கால் பின்புறத்தில் பவுண்டரி எல்லையில் பட்டதால் அது அவுட் என்று உறுதியாக சொல்ல முடியாது என என்னிடம் கூறினார்” என்று தெரிவித்திருந்தார்.