ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை சுக்கு நூறாக உடைத்து 8வது முறையாக கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் சிராஜ் வீசிய ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 51 ரன்கள் என்ற இலக்கை 6.1 ஓவர்களில் எட்டி இந்திய அணி சரித்திர சாதனையை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக ஆட்டநாயகன் விருது முகமது சிராஜ்-க்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியின் மூலமாக முகமது சிராஜ் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.
அதில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்துள்ளார். அதேபோல் குறைந்த பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் சமிந்தா வாஸிடம் இருந்தது. அந்த சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்.
வெறும் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் அசத்தி இருக்கிறார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முகமது சிராஜ் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். 1002 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை சிராஜ் வசம் உள்ளது.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர்களில் முகமது சிராஜ் 4வது இடம் பிடித்துள்ளார். அதேபோல் கடந்த 1990 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஜாம்பவான் வாக்கர் யூனுஸ் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார். அவர் 26 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை தற்போது 30 வருடங்கள் கழித்து முறியடித்துள்ளார் முகமது சிராஜ்.
அதேபோல் 2008ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் அஜந்தா மெண்டிஸ் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறந்த பந்துவீச்சாக அதற்கு பின், முகமது சிராஜின் 21/6 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
இது மட்டும் அல்லாது, கடந்த 2003 உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சமிந்த வாஸ் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை தற்போது 20 வருடங்கள் கழித்து சமன் செய்துள்ளார் சிராஜ்.