மிக முக்கியமான ஒரு கட்டத்தில் ஐபிஎல் போட்டிகள் தற்போது எட்டியுள்ள நிலையில், இனி வெற்றி பெறும் ஒவ்வொரு அணிகளும் தங்களின் பிளே ஆப் வாய்ப்பை பலமாக்கும் என்றும் கருதப்படுகிறது. கொல்கத்தா அணி மட்டும் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மற்ற ஆறு அணிகள் அதில் முன்னேறும் மூன்று இடங்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தான் தற்போதும் பிளே ஆப் வாய்ப்புள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் சமீபத்தில் நடந்த போட்டியில் மோதி இருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேஷர் இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆக மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் போரல் வழக்கம்போல அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்திருந்தார்.
இவர் 33 பந்துகளில் ஐந்து ஃபோர்கள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுக்க கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டெல்லி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் நான்கு சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு நடுவே சாய் ஹோப் மற்றும் ரிஷப் பந்த்தும் நல்ல பங்களிப்பை அளிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.
200 ரன்களை முதலில் பேட்டிங் செய்து டெல்லி கடந்துள்ள போட்டியில் இதுவரை ஒருமுறை கூட தோல்வி அடைந்தது கிடையாது. இதனால், லக்னோ அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்குமோ என்றும் கருதப்பட்டு வந்த நிலையில் அதே போன்று தான் அவர்களின் பேட்டிங்கும் ஆரம்பத்தில் அமைந்தது.
கே எல் ராகுல், டி காக் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை இஷாந்த் ஷர்மா எடுக்க, டி காக்கை தவிர மற்ற அனைத்து வீரர்களும் 10 ரன்களுக்குள் மட்டுமே எடுத்து அவுட்டாகினர். 71 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து லக்னோ தவித்து கொண்டிருந்த அதே வேளையில், நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ரன் சேர்த்து போராடி கொண்டிருந்தார். 20 பந்துகளில் அரை சதத்தையும் கடந்த பூரன், 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 ஃபோர்களுடன் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதனால் லக்னோவின் வெற்றி வாய்ப்பும் மங்கிப் போக, திடீரென உள்ளே வந்த இளம் வீரர் அர்ஷத் கான் தனியாளாக டெல்லி அணிக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். கடைசி 4 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட, அதிரடி கட்டிய அர்ஷத் கான், 25 பந்துகளில் 50 ரன்கள் கடந்து நம்பிக்கையை கொடுத்திருந்தார்.
கடைசி 12 பந்துகளில் 29 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், அந்த ஓவரை சிறப்பாக வீசிய முகேஷ் குமார் 6 ரன்களை மட்டுமே கொடுக்க, கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை ராசிக் டர் சலாம் வீச, லக்னோ அணியால் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற, லக்னோ அணியின் பிளே ஆப் வாய்ப்புக்கும் நெருக்கடி உருவாகி உள்ளது.