17 வது ஐபிஎல் சீசனின் 11 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. முன்னதாக பத்து போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகியோர் தலா 2 போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இருந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிராக வெற்றியைக் கண்டிருந்த அவர்கள், பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வியடைந்து இருந்தனர். மறுபுறம் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடியிருந்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி கண்டிருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் இந்த போட்டியில் மோதி இருந்தது.
இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுல், இம்பாக்ட் பிளேயராக அறிவிக்கப்பட்டதுடன் பூரான் லக்னோ அணியை தலைமை தாங்கி இருந்தார். இதில் முதலில் பேட்டிங் செய்திருந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க வீரர் டி காக் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டாக ஒரு கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் நிக்கோலஸ் பூரான் 21 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று ஃபோர்களுடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வகையில் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய குர்னால் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
இன்னும் பத்து முதல் பதினைந்து ரன்கள் அடிக்கும் வாய்ப்பு லக்னோ அணிக்கு இருந்தும் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்ததால் அவர்கள் 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். 200 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் தவான் மற்றும் பேர்ஸ்டோ இணைந்து சிறப்பாக ரன்கள் சேர்த்தனர்.
பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை அவர்கள் எடுத்திருந்த நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து 102 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், பேர்ஸ்டோ 42 ரன்களில் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து, மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோசின் கான் 2 விக்கெட்டுகளையும் சாய்க்க, கடைசி 3 ஓவர்களில் பஞ்சாபின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் தொடர்ந்து, லக்னோ அணி சிறப்பாக பந்து வீசியதால் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 178 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. தவான், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட வீரர்கள் இருந்தும் லக்னோ அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீசி வெற்றியை சொந்தமாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.