ஐபிஎல் தொடர் போலவே இந்தியாவைச் சுற்றி ஏராளமான டி20 லீக் தொடர்கள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பெல்லாம் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட ஒரு சில தொடர்கள் தான் சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஆனால் தற்போது இந்தியாவில் ஏராளமான முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது பல இளம் வீரர்களுக்கும் சர்வதேச அணியை அடையும் லட்சியமாகவும் அமைந்து வருகிறது.
அந்த வகையில் ஐபிஎல் தொடர் மிகச்சிறந்த உதாரணமாக இருந்து வரும் நிலையில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, இஷன் கிஷான் என பல இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் தான் இந்திய அணியிலும் இடம்பிடித்து தற்போது சர்வதேச அரங்கிலும் முக்கியமான வீரர்களாக இருந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரை போல தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் டி 20 லீக் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஜா கோப்பை டி20 லீக் தொடர் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல இடங்களின் அடிப்படையில் நிறைய அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மகாராஜா கோப்பை டி20 லீக் தொடரில் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் ஹுப்லி டைகர்ஸ் மற்றும் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்ய அதன்படி ஆடிய ஹுப்லி டைகர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக கேப்டன் மணிஷ் பாண்டே 33 ரன்களும், தாஹா 31 ரன்களும் எடுத்திருந்தனர்.
பெங்களூரு அணி தரப்பில் லவீஷ் கவுசல் நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசர வைத்திருந்தார். இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியும் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்ததால் சூப்பர் ஓவருக்கும் போட்டிச் சென்றிருந்தது.
இதன் முதல் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி பத்து ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் ஆடிய ஹூப்லி அணியும் பத்து ரன்கள் எடுக்க இரண்டாவது சூப்பர் ஓவர் ஆரம்பமானது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹுப்லி டைகர்ஸ் அணி 8 ரன்கள் எடுக்க 9 ரன்கள் இலக்குடன் ஆடிய பெங்களூர் அணி எட்டு ரன்கள் எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.
ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சூப்பர் ஓவர் சென்ற போட்டிகள் இருந்தாலும் மூன்றாவது முறையாக இந்த டி20 லீக் போட்டி சென்றது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 12 ரன்கள் எடுக்க பின்னர் ஆடிய ஹுப்லி அணி, ஐந்து பந்துகளில் 9 ரன்கள் சேர்த்திருந்தது.
இதனால், கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற விறுவிறுப்பான சூழலில், அதுவும் டையாகுமோ என ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். ஆனால், கடைசி பந்தில் 4 ரன்களை ஹுப்லி அணி எடுக்க அவர்கள் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர். மூன்றாவது சூப்பர் ஓவர் சென்று முடிந்த இந்த போட்டி பற்றி தான் தற்போது அனைவரும் பேசி வருகின்றனர்.