இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தன்னுடைய காரில் சொந்த ஊரான உத்தரகாண்ட் செல்லும் போது மோசமான விபத்தில் சிக்கினார். அதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது நீண்டகால ஓய்வில் இருக்கிறார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன், விபத்தின் பல காயங்களில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார். அவர் சமீபத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளின் போது தனது அணிக்கு ஆதரவாக மைதானத்தில் தோன்றினார். இந்நிலையில் பண்ட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாக, கார் விபத்துக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்மிற்கு வந்துள்ளார்.
சமீபத்தில், பந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மிற்குச் சென்றதைக் குறிக்கும் ஒரு ஸ்டோரியை வெளியிட்டார். அதில், அவர் “விளையாட்டு குணத்தை உருவாக்காது, அதை வெளிப்படுத்துகிறது”என்று மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் வாக்கிங் ஸ்டிக் உதவியில்லாமல் அவர் உடல்பயிற்சிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
பண்ட், இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான உறுப்பினராக மூன்று வடிவங்களிலும் இடம்பெற்று இருந்தார். இந்த விபத்தால் இந்த ஆண்டில் திட்டமிடப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற வரவிருக்கும் பெரிய தொடர்களை அவர் நிச்சயமாக தவறவிடுகிறார். பந்த் இல்லாததால், அவருக்குப் பொருத்தமான மாற்று வீரரை தேர்வுக்குழு தேர்ந்தெடுப்பதில் பெரும் குழப்பம் இந்திய அணியில் ஏற்பட்டுள்ளது.
இந்திய கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், துயரமான விபத்தைத் தொடர்ந்து மீண்டு வருவதற்கான தனது பாதையில் ஒரு பெரிய படியை எடுத்துள்ளதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை வழங்கி உள்ளார்.
Happy NO MORE CRUTCHES Day!#RP17 pic.twitter.com/mYbd8OmXQx
— Rishabh Pant (@RishabhPant17) May 5, 2023
ஜனவரி மாதம் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதில் இருந்து தொடர்ந்து தனது குணமடைந்து வரும் அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் ரிஷப் பந்த், ஊன்றுகோல் உதவியின்றி நடக்க முடிந்ததால் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை அளித்தார். இதனால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவரின் மறுவருகை வெகு விரைவிலேயே அரங்கேறும் என நம்பலாம்.