சீனாவில் ஆசியப் போட்டிகள் செப்.23ஆம் தேதி முதல் அக்.8ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. ஆனால் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் மட்டும் செப்.18ஆம் தேதி முதலே நடைபெற்று வருகிறது. அதேபோல் ஆசியக் போட்டிகளில் இம்முறை கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ தங்களின் அணியை அனுப்புவதற்கு அனுமதியளித்து அனுப்பியுள்ளது.
இதனால் ஆசியப் போட்டிகளில் இந்திய அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இந்தியாவின் இரு அணிகளும் தங்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் 18 நாடுகள் தரப்பில் அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில் ஆசியப் போட்டிகள் தொடரில் இன்று முதல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மகளிர் அணிகள் மோதிக் கொண்ட இந்தப் போட்டியில் இந்தோனேஷியா மகளிர் அணியை எதிர்த்து மங்கோலியா மகளிர் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்தோனேஷியா அணி கேப்டன் வயான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்தோனேஷியா அணி முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை டெவி 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு தொடக்க வீராங்கனை சகரினி 35 ரன்களும், கொரசோன் 22 ரன்களும், கிசி காசே 18 ரன்களும், ரமாவடி 1 ரன்னும் எடுத்தனர். அதுமட்டுமல்லாமல் மங்கோலியா பவுலர்கள் மொத்தமாக 38 ஒய்டு, 10 நோ-பால் மற்றும் ஒரு பைஸ் விட்டு கொடுத்தனர்.
இதுமட்டுமே 49 ரன்களாக இருக்க, மொத்தமாக இந்தோனேந்தியா மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய மங்கோலியா மகளிர் அணி 10 ஓவர்களில் மொத்தமாக 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதில் இன்னொரு கொடுமையான விஷயம் என்னவென்றால், 15 ரன்களில் 4 ஒய்டுகள் மற்றும் ஒரு லெக் பைஸ் என்பது தான்.
மொத்தமாக 7 வீராங்கனைகள் டக் அவுட்டாகி உள்ளனர். அதேபோல் இந்தோனேஷியா அணி தரப்பில் ரஹ்மாவாடி, டெவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரியானி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.