மகாராஜா கோப்பை டி20 போட்டி கர்நாடகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த ஆட்டத்திற்கான இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஹூப்ளி டைகர்ஸ் அணியும் மைசூரு வாரியர்ஸ் அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற மைசூரு வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக கருண் நாயரும் ஹூப்ளி டைகர்ஸ் அணியின் கேப்டனாக மனிஷ் பாண்டேவும் செயல்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த ஹூப்ளி டைகர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. இதன் தொடக்க ஆட்டக்காரரான லுவ்னித் சிசோடியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க வீரரான தாஹா 72 ரன்களும் அதன் பிறகு களமிறங்கிய கிருஷ்ணன்ஸ்ரீஜித் 38 ரன்களும், சஞ்சய் அஸ்வின் 16 ரன்களும் கேப்டன் மனிஷ்பாண்டே ஐம்பது ரன்களும் குவித்தனர்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணி தொடக்க வீரர்கள் கார்த்திக் 28 ரன்களும் ரவிக்குமார் சமர்த்தன் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கருண் நாயர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய லங்கேஷ் 13 ரன்களிலும் கோதண்ட அஜித் கார்த்திக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹூப்ளி டைகர்ஸ் அணி மகாராஜா கோப்பையை தட்டி சென்றது. கேப்டன் மனிஷ் பாண்டே ஆட்டநாயகன் விருதை பெற்றார். வலது கை ஆட்டக்காரரான கருண் நாயர் இந்த மகாராஜா கோப்பை டி20 போட்டியில் மொத்தம் 12 ஆட்டங்களில் 532 ரன்களை குவித்து டாப் ஸ்கோரராக உள்ளார்.
பௌலர்களைப் பொறுத்தவரை மன்வந்த் குமார் மொத்தம் 12 ஆட்டங்களில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பௌலர்களின் அதிக விக்கெட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் வீழ்த்திய 22 விக்கெட்டுகளில் ஒரு நான்கு விக்கெட் ஹால் மற்றும் ஒரு ஐந்து விக்கெட் ஹால் ஆகியவை அடங்கும். சாம்பியன் பட்டத்தை வென்ற ஹூப்ளி அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போட்டியின் இறுதியில் மைசூர் வாரியர்ஸ் அணிக்கு நான்கு பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மைசூர் வாரியர்ஸ் அணியின் வீரர் பந்தை அதிரடியாக சிக்சருக்கு விளாச நினைத்தார். ஆனால் பவுண்டரி கோட்டிற்கு அருகே நின்ற ஹூப்ளி அணியின் கேப்டன் மனிஷ் பாண்டே உயரமாக பறந்து பந்தை லாவகமாக தடுத்து 5 ரன்களை சேமித்தார். இதுதான் அந்த ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. சிறப்பாக செயல்பட்ட மனிஷ் பாண்டேவை அந்த அணியின் மற்ற வீரர்கள் வெகுவாக பாராட்டினார்.