இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்காக நேரடியாக தகுதி பெற்ற அணிகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கின்றன. அந்த வகையில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் பின்தங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியும் தகுதி சுற்றில் போட்டிகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த உலகக்கோப்பை குவாலிபயர் போட்டிகளுக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட முதன்மை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் அனுபவ வீரர் அஞ்சிலோ மேத்யூஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதோடு சேர்த்து தற்போது உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதேவேளையில் இந்த ஐசிசி உலகக் கோப்பை குவாலிபயர் போட்டிகளுக்கான அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல பெரிய அளவில் பங்காற்றி இருந்தார்.
இந்நிலையில் 20 வயதான அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகமானதோடு தற்போது உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணியிலும் இடம் பிடித்துள்ளார். இந்த குவாலிபயர் போட்டிகளில் இலங்கை அணி தேர்ச்சி பெற்றால் மட்டுமே 50 ஓவர் உலககோப்பையில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இலங்கை அணி அறிவித்துள்ள 15 பேர் கொண்ட அணி இதோ :
1) தசுன் ஷனகா, 2) குசால் மெண்டிஸ், 3) திமுத் கருணரத்னே, 4) பதும் நிசாங்கா, 5) சாரித் அசலங்கா, 6) தனஞ்ஜெயா டி சில்வா, 7) சமரவிக்ரமா, 8) வனிந்து ஹசரங்கா, 9) சமிகா கருணரத்னே, 10) துஷ்மந்தா சமீரா, 11) கசுன் ரஜிதா, 12) லஹிரு குமாரா, 13) மஹீஷ் தீக்ஷனா, 14) மதீஷா பதிரானா, 15) துஷான் ஹேமந்தா.
இந்த அணியில் மதீஷா பதிரானாவின் பெயரை கண்ட சிஎஸ்கே ரசிகர்கள், தோனியின் பட்டறையில் பட்டை தீட்டப்புள்ள வைரம் பதிரானா. தோனியின் காணப்பட்டதால் தான் அவர் இந்த அளவிற்கு வளர்ந்துளார் என புகழ்ந்து வருகின்றனர்.