ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றவில்லை என்ற குறையை போக்கிக் கொள்ள தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று இந்திய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முதல் முறையாக கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியும் தீவிர முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே மிகவும் பரபரப்பாக நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி குறித்தும், இந்திய அணி வீரர்கள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இஷான் கிஷனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இந்திய அணி ஏற்கனவே ரிஷப் பண்ட்டை தற்போது இழந்துள்ளது. அதன் காரணமாக அவரது இடம் வெற்றிடம் ஆகியுள்ளது. இந்நிலையில் அவரை போன்று விக்கெட் கீப்பிங் செய்வதோடு மட்டுமின்றி பேட்டிங்கில் அதிரடி காண்பிக்கும் இஷான் கிஷனை அணியில் விளையாட வைத்தால் நிச்சயம் இந்திய அணியின் பேட்டிங் வலிமை அதிகரிக்கும்.
அதோடு அதிரடியாக விளையாடும் அவரைப்போன்ற ஒரு வீரர் பேட்டிங் லைனில் இருந்தால் நிச்சயம் அது எதிரணியின் பவுலர்களுக்கும் அழுத்தத்தை தரும். அதன் காரணமாக நிச்சயம் இந்த இறுதி போட்டியில் இஷான் கிஷனை விளையாட வைக்க வேண்டும். அவரால் பந்துகளை நன்றாக எதிர்கொண்டு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவிக்க முடியும். எனவே என்னை பொருத்தவரை ரிஷப் பண்டிற்கு பதிலாக அவரது இடத்தில் இஷான் கிஷன் அந்த ரோலை சரியாக செய்வார் என்ற நம்பியுள்ளதாக மேத்யூ ஹைடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே: ஒரு வார்த்தைய சொல்லி சொந்த மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்த கான்வே. இனிமே பாத்து பக்குவமா பேசாட்டி அவ்ளோ தான் போல
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக இஷான் கிஷன் விளையாடி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் இதுவரை விளையாடியதில்லை. அதே வேளையில் கடந்த பல ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே இடம் பிடித்து விளையாடி வரும் கே.எஸ் பரத் பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்த இடத்தை பிடித்துள்ளார் என்பதனால் நிச்சயம் கே.எஸ் பரத்தே இறுதி போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது .