ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஏதாவது ஒரு இளம் வீரர்கள் கவனம் ஈர்ப்பது போல இந்த முறை ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இளம் வீரர் மயங்க் யாதவ். இவருக்கு தற்போது 22 வயதே ஆகும் நிலையில் லக்னோ அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பிடித்துள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக இவரால் ஆட முடியாமல் போக இந்த முறை அவருக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொண்ட இவர், மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும் இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெறவும் அவர் காரணமாக இருந்ததால் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். பெங்களூர் அணிக்கு எதிராக தற்போது நடந்த போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி இருந்த மயங்க் யாதவ், பட்டிதர், மேக்ஸ்வெல் மற்றும் கிரீன் ஆகியோரின் விக்கெட்டை எடுத்திருந்தார்.
அதிலும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி கிரீனின் போல்டை எடுத்தது தான் தற்போது பல ஜாம்பவான்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இரண்டே போட்டியில் ஐபிஎல் தொடரில் இதுவரை ஆடியுள்ள மயங்க் யாதவ், அனைத்து பந்துகளையுமே ஏறக்குறைய 150 கி. மீ வேகத்தில் தான் வீசி வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் ஆடிய முதல் போட்டியிலேயே அதிவேக பந்து வீசிய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அதைவிட வேகமாக பந்து வீசி உள்ள மயங்க் யாதவ், இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணியின் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்ப்பார் என்றும் தெரிகிறது. அதிலும் இந்திய அணிக்கு சமீபகாலமாக இந்த அளவுக்கு வேகமாக தொடர்ந்து பந்து வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்ற சூழலில், பிரட்லீ, ஸ்டெயின் என வேகப்பந்து உலகின் ஜாம்பவான்கள் பலரும் மயங்க் யாதவை கொண்டாடி வருகின்றனர். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.
இதற்கு பின் அவர் பேசுகையில், “இரண்டு போட்டிகளில் இரண்டிலும் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது நிச்சயம் சிறப்பாக உள்ளது. ஆனால் அதைவிட இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. அணிக்காக ஆட வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள். இது என்னுடைய ஆரம்பம் மட்டும் தான். நான் இந்த போட்டியில் கிரீனின் விக்கெட்டை எடுத்ததை அதிகம் ரசித்திருந்தேன். வேகமாக பந்து வீசுவதற்கு டயட், உறக்கம் மற்றும் பயிற்சி உள்ளிட்டவை மிக முக்கியம். நான் என்னுடைய டயட் மற்றும் காயத்திலிருந்து மீண்டு வருவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன்” என மயங்க் யாதவ் கூறியுள்ளார்.