டெஸ்ட் தொடரில் சமீப காலமாக மிக மோசமாக தனது பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்ததுடன் மட்டுமில்லாமல் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தவர் தான் விராட் கோலி. கடந்த ஐந்து ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்திருந்த விராட் கோலி மற்ற இரண்டு வடிவிலும் சிறப்பாக தான் ஆடி வந்தார்.
ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறி வந்த சூழலில் இந்திய மண்ணிலேயே நடந்த நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மோசமாக ஆடியிருந்தார். மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் விராட் கோலி தனியாளாக சிறப்பாக ஆடினாலே இந்திய அணியை வெற்றி பெறும் அளவுக்கு கொண்டு செல்ல அவரால் முடியும். அப்படி இருந்தும் அவர் தொடர்ந்து திணறி வந்தது ஏன் என்பதே ரசிகர்களுக்கு புரியாமல் இருக்க டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவிக்க வேண்டும் என்றும் பலர் குறிப்பிட தொடங்கி விட்டனர்.
இதற்கு மத்தியில் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக காலடி எடுத்து வைத்திருந்த விராட் கோலி, மிகத் தீவிரமாக பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். சச்சினுக்கு நிகராக ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய சாதனைகளை சொந்தமாக்கி வைத்துள்ள விராட் கோலி, நிச்சயம் முதல் டெஸ்டில் இருந்து ஃபார்மாகி தன் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்குவார் என கருதப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து விராட் கோலி ஏமாற்றத்தை கொடுக்க ரசிகர்களும் வெந்து போயினர். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் ரன் குவிப்பிற்கும் காரணமாக இருந்த கோலி தனது 81 வது சர்வதேச சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்து அனைவரையும் அசர வைத்திருந்தார்.
முதல் டெஸ்டிலேயே கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளது மீதமிருக்கும் நான்கு போட்டிகளிலும் இந்திய அணிக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க், விராட் கோலியை பார்த்து பயந்தது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.
“ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது ஒரு பெரிய விஷயம் தான். ஆனால் அதைவிட விராட் கோலி சதமடித்துள்ளது தான் எனக்கு அதிக பயத்தை கொடுக்கிறது. என்னை பொருத்தவரையில் இந்த தொடரில் அதிக ரன் அடித்த இந்திய வீரராக விராட் கோலி இருப்பார் என்று கருதுகிறேன்” என மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
ஆரம்பத்திலேயே டெஸ்ட் தொடரில் தடுமாற்றம் காணும் விராட் கோலி இந்த முறை சதத்துடன் தொடங்கியுள்ளதால் அனைத்து போட்டிகளிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கும் என்பதை தான் மைக்கேல் கிளார்க் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.