சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்து டெஸ்ட் அரங்கில் மிக மோசமான ஒரு சம்பவத்தையும் பதிவு செய்திருந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது மண்ணிலேயே வெற்றியுடன் அந்த தொடரை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை தவற விட்டிருந்தாலும் இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்கள் என்று தான் அனைவருமே கருதி வருகின்றனர்.
ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட ஆஸ்திரேலிய அணி இந்த முறை தொடரை கைப்பற்றும் என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் முதல் டெஸ்டிலேயே இந்தியாவுக்கு எதிராக பரிதாபமாக தோல்வியடைந்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பிலும் சற்று சிக்கல் உருவாகி உள்ளது.
முதல் இன்னிங்சில் இந்திய அணியை குறைந்த ரன்களில் சுருட்டினாலும் பேட்டிங்கில் கவனத்தை சிதறவிட்ட அவர்கள் 104 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர். இதே போல இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சிலும் சொதப்பி இருந்த ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் படுமோசமாக ஆடியிருந்தது. இந்திய வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கினார்கள் என்பதை தாண்டி ஆஸ்திரேலிய அணி பலவீனமாக மாறியது ஏன் என்ற கேள்வியும் அதிகமாக எழுந்துள்ளது.
அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சிலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஹேசல்வுட் இரண்டாவது டெஸ்டில் இல்லை என்பதால் கம்மின்ஸ் தனது பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்த நிலையில் பேட் கம்மின்ஸ் குறித்து மைக்கேல் வாகன் ஒரு சில கருத்துக்களையும் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
“பேட் கம்மின்ஸ் ஒரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். அதே நேரத்தில் அற்புதமான ஒரு கேப்டன் மற்றும் பந்து வீச்சாளரும் கூட. ஆனால் இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் அவரது வேகம் சற்று குறைவாக இருந்தது. இதற்கு காரணம் கடந்த மார்ச் மாதம் முதல் அவர் எந்தவித டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பதுதான்.
இதனால் அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் தனது வேகத்தில் இன்னும் முன்னேறுவார் என தெரிகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் போட்டியை அவர் ஆடி முடித்துள்ளதால் அதில் சில ஓவர்கள் பந்து வீசியதும் அவரது உடல் மற்றும் மனதளவில் மீண்டும் நீண்ட வடிவிலான போட்டிகளை ஆடியுள்ளதற்கான நம்பிக்கையையும் கொடுத்திருக்கலாம்.
அடுத்த டெஸ்டிலும் 135 கி. மீட்டர் வேகத்திற்கு குறைவாக வீசி, பேட்ஸ்மேன்களுக்கு அதிக நேரம் கொடுப்பதுடன் தனது வேகம் மற்றும் துல்லியத்தை சரியான முறையில் கொடுப்பதற்காக அந்த நேரத்தை அவர் எடுத்துக் கொள்ளலாம்” என இந்திய அணிக்கும் சேர்த்து ஒரு எச்சரிக்கையையும் மைக்கேல் வாகன் கொடுத்துள்ளார்.