லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, இந்த சீசனின் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக நடந்து முடிந்தது. போட்டி முடிந்துவிட்டாலும் இன்னும் அந்த போட்டி சம்மந்தமான சர்ச்சைகள் ஓயவில்லை. மிகவும் லோ ஸ்கோர் மேட்ச்சான இந்த போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்ததும் கோலியும் லக்னோ அணி ஆலோசகர் கௌதம் கம்பீரும் காரசாரமாக பேசிக் கொண்டது கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் பற்றி தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி கோலியிடம் கம்பீர் ‘நீ என் வீரர்களிடம் என்ன சொன்னாய்?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு கோலி “உங்களிடம் நான் எதுவும் பேசாத போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள்” எனக் கேட்டுள்ளார். அதற்குக் கம்பீர் “நீ என் அணி வீரர்களை பற்றி அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என் குடும்பத்தைப் போன்றது.” எனக் கூறவே, பதிலுக்கு கோலி துடுக்காக “அப்படி என்றால் உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு கம்பீர் “நீ எனக்குக் கற்றுக் கொடுக்கிறாயா?” எனக் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் இந்த விவகாரத்தில் கம்பீர் மீதுதான் அதிக தவறு என விமர்சித்துள்ளார்.
இது சம்மந்தமாக அவர், “வீரர்கள் களத்தில் இதுபோல சிறிய மோதல்களில் ஈடுபடுவதை நான் பொருட்படுத்தவில்லை. இது வெறும் விளையாட்டான ஒன்று. நீங்கள் ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்க விரும்பமாட்டீர்கள். ஆனால் பயிற்சியாளர்கள் மோதலில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. பயிற்சியாளர் அல்லது பயிற்சித் துறையின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இதுபோல மோதலில் ஈடுபடுவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.
களத்தில் நடப்பது களத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டால், பயிற்சியாளர்கள் அதை தீர்த்து வைக்க வேண்டும். பயிற்சியாளர்கள் டக்அவுட் அல்லது டிரஸ்ஸிங் ரூமில் மட்டுமே இருந்து உத்திகளைப் வகுத்துக் கொண்டிருக்க வேண்டும்,” என்று மைக்கேல் வாகன் கம்பீரை குறைகூறி பேசியுள்ளார்.