இந்தியாவில் கடந்த மாதம் நடந்து முடிந்த உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறி இருந்தது. அரையிறுதி வரை ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாத இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
ஆனால், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அனைத்தையும் தலை கீழாக திருப்பி போட்டது. போட்டி முழுவதும் மொத்த மைதானமும் அமைதியாக இருக்கும் வகையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்தது ஆஸ்திரேலிய அணி. 240 ரன்களில் இந்திய அணியை சுருட்டிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலக கோப்பையை தட்டிச் சென்று சாதனை புரிந்திருந்தது.
மறுபக்கம், இந்திய ரசிகர்கள் அனைவருமே கடும் சோகத்திலும், ஏமாற்றத்திலும் ஆழ்ந்து போயினர். இருந்த போதும் இறுதி போட்டி வரை சிறப்பாக ஆடிய இந்திய வீரர்களை பலர் பாராட்டவும் செய்திருந்தனர். இதற்கு மத்தியில் தான், இந்திய ரசிகர்கள் பலரையும் கொந்தளிக்க வைக்கும் வகையிலான காரியம் ஒன்றை ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் செய்திருந்தார். உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்ற பின்னர் அதன் மீது, மார்ஷ் கால் நீட்டி வைத்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி, பெரிய அளவில் சர்ச்சையை உண்டு பண்ணி இருந்தது.
பலரும் மிட்செல் மார்ஷ் செயலுக்கு கண்டனங்களையும், அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், உலக கோப்பையை மார்ஷ் அவமதித்ததாக கூறி, புகார் அளிக்கும் அளவுக்கும் இந்த விவகாரம் சென்றது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூட மார்ஷின் செயலால் காயமடைந்ததாக கூறி இருந்தார். தனது செயலால் மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் உருவான போதும் இத்தனை நாட்களாக வாயை திறக்காமல் இருந்து வந்த மிட்செல் மார்ஷ், தனது செயல் குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
“உலக கோப்பையில் நான் கால் வைத்ததில் எந்த அவமரியாதையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதில் எதுவுமே இல்லை. நான் அதை பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. மேலும் எனக்கு கோப்பையை அவமதிக்கும் எண்ணமும் இல்லை. அதில் தவறாக ஒன்றுமில்லை என்பது தான் உண்மை” என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவே மார்ஷ் செயலால் கொந்தளித்த சூழலில், அதில் அவமரியாதை இல்லை என அவரே நீண்ட நாட்கள் கழித்து விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.