ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 110 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் விளையாடி சுமார் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் இன்னும் 18 டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் விளையாடினால், ஜாம்பவான் வீரர் மெக்ராத்திற்கு பின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.
இதன் காரணமாக டி20 கிரிக்கெட் மற்றும் டி20 லீக் போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் மிட்செஸ் ஸ்டார்க், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அண்மையில் முடிந்த ஆஷஸ் தொடரில் கூட தொடர் நாயகன் விருதை வென்று மிட்செஸ் ஸ்டார்க் அசத்தினார். அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் ஜான்சனுக்கு பின் சிறந்த இடதுகை பவுலராக ஸ்டார்க் திகழ்ந்து வருகிறார்.
சர்வதேச அளவில் ஐபிஎல் தொடரில் விளையாட ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆர்வமாக இருந்தாலும், மிட்செஸ் ஸ்டார்க் மட்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை நிறுத்தி இருந்தார். ஆர்சிபி அணிக்காக இரு சீசன்களில் மட்டுமே பங்கேற்று 27 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இவரை ஒப்பந்தம் செய்ய அணிகள் முன் வந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின் மிட்செஸ் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் பேசும் போது, அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் வாய்ப்பு கிடைத்தால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயாராக உள்ளேன்.
ஆஸ்திரேலிய அணியில் அடுத்த சூப்பர் ஸ்டார் பவுலர்கள் தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே ரிச்சர்ட்சன், ஷேன் அப்பாட் இருக்கும் நிலையில் ஸ்பென்சர் ஜான்சன், மோரிஸ் உள்ளிட்டோர் வரவிருக்கிறார்கள். இதனால் டி20 உலகக்கோப்பையை மட்டும் மனதில் வைத்து விளையாடாமல், ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகளும் போட்டி போடும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் ராஜஸ்தான் அணிக்காக போல்ட் செய்து வரும் மேஜிக்கை மற்ற அணிகளும் செய்து பார்க்க விரும்புவதே இதற்கு பின்னிருக்கும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.