கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது அடுத்ததாக தற்போது இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கவுள்ள 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை மீண்டும் எதிர்த்து விளையாட இருக்கிறது. கடந்த முறை லண்டனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர்கள் விளையாடயிருக்கும் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. கடந்த முறை இவ்விரு அணிகளும் மோதிய உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி “டை” ஆனது/ அதன் பின்னர் சூப்பர் ஓவரும் “டை” ஆகவே பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ள மாபெரும் 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இதற்காக ஏற்கனவே இந்தியா வந்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடி முடித்து தற்போது இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாட தயாராக காத்திருக்கின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கோப்பையை வென்ற பின்னர் தற்போது பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் அசத்தலான பார்மில் உள்ளதால் அவர்கள் இம்முறையும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டுவார்கள்.
அதே போன்று நியூசிலாந்து அணி கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இங்கிலாந்து அணியை வீழ்த்த காத்திருப்பதால் நாளைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான மொயின் அலி இந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து பேசுகையில் : நாங்கள் இந்த போட்டிக்காக தயாராக இருக்கிறோம். நிச்சயம் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மிகப் பெரிய போட்டியாக எங்களுக்கு காத்திருக்கிறது.
அதோடு நியூசிலாந்து அணி எப்பவுமே ஒரு அபாயகரமான அணி. எனவே அவர்களுக்கு எதிராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த கவனமுடன் தயாராகி வருவதாக மொயின் அலி கூறியுள்ளார். தற்போதைய இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், சாம் கரன், மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் அந்த அணி வெற்றிக்கு அதிக சாதகம் உள்ள அணியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.