பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது 17-வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக பெரிய ஜாம்பவானாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தனது கரியரின் ஆரம்ப கட்டத்திலேயே சூதாட்டத்தில் ஈடுபட்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்தார். இளம் வயதிலேயே மிகப்பெரிய ஜாம்பவான்களின் பாராட்டினை பெற்ற அவர் சூதாட்டத்தினால் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து மீண்டும் 2016-ஆம் ஆண்டு தன்மீது இருந்த தடை நீங்க மறுபடியும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்தார்.
ஆனால் திடீரென கடந்த 2020-ஆம் ஆண்டு தனது 28 வது வயதிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய முகமது அமீர் இதுவரை அந்த அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அதோடு 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 59 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். இப்படி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு விளையாடியுள்ள அவர் மீண்டும் அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினாலும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அதோடு அடுத்த 2024-ஆம் ஆண்டு அவருக்கு இங்கிலாந்தில் குடியுரிமை கிடைக்கப்பட உள்ளது.
ஏனெனில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவி நர்சிஸ்கான் இங்கிலாந்தில் இருப்பதினால் அவரும் அங்கு குடிபெயர்ந்து தற்போது இங்கிலாந்து நாட்டின் குடியுரிமைக்காக காத்திருக்கிறார். ஒருவேளை அடுத்த ஆண்டு அவர் குடியுரிமை பெற்றுவிடுவாராயின் அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுவார் என்று தெரிகிறது.
மேலும் அடுத்த ஆண்டு அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அவர் இங்கிலாந்து அணிக்காகவும் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் வேளையில், தான் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்காக விளையாடி விட்டதால் கண்டிப்பாக இங்கிலாந்து அணிக்காக எப்போதும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு ஐபிஎல் குறித்து அவர் பேசுகையில், முதலில் குடியுரிமை கிடைக்க வேண்டும். அதற்க்கே இன்னும் ஒரு வருடகாலம் இருக்கிறது. படிப்படியாக தான் ஒவ்வொன்றைம் செய்யவேண்டும் என்று கூறி உள்ளார். ஆக, அவருக்கான குடியுரிமை குடித்துவிட்டால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளார் என்பது அவரது பதிலில் தெளிவாக தெரிகிறது.