இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதன் காரணமாக பும்ராவுடன் இணைந்து மற்றொரு முக்கிய வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி களமிறங்கினார்.
சிராஜின் எழுச்சியால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமியால் இடம்பிடிக்க முடியவில்லை. சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் பேட்டிங் திறமை இல்லையென்று ஷமியை பிளேயிங் லெவனில் இறக்க மறுக்கிறது இந்திய அணி நிர்வாகம். இதனால் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக முகமது ஷமி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷை 4 ரன்களில் வீழ்த்தினார் ஷமி. இதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித் – வார்னர் பார்ட்னர்ஷிப் உருவாகிய நிலையில், மீண்டும் பந்துவீச வந்த ஷமி, ஸ்டீவ் ஸ்மித்தை 45 ரன்களில் வீழ்த்தினார். இதனால் ரசிகர்கள் பலரும் முகமது ஷமியின் சிறந்த கம்பேக் இது என்று பாராட்டினர்.
ஆனால் டெத் ஓவர்களை வீசுவதற்கு முகமது ஷமியை மீண்டும் அழைத்தார் கேப்டன் கேஎல் ராகுல். ஒரு பக்கம் பும்ரா நெருக்கடி கொடுக்க, இன்னொரு பக்கம் ஷமி பந்துவீச, ஆஸ்திரேலிய அணியின் டெய்லண்டர்கள் என்ன செய்வதென தெரியாமல் பேட்டை எந்த பக்கம் சுற்றுவது என்று தெரியாமல் சுற்றினர்.
இதனால் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 29 ரன்களிலும் போடாகி வெளியேற, 49வது ஓவரில் மேத்யூ ஷார்ட் 2 ரன்களிலும், அப்பட் 2 ரன்களிலும் போல்டாகி ஆட்டமிழந்தனர். இதன் மூலம் முகமது ஷமி 10 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் 93 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளராக தற்போது ஷமி உள்ளார். இதனால் அடுத்தப் போட்டியில் சிராஜ் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.