இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் பலம் வாய்ந்த வீரர்களை மொத்தமாக களமிறக்கினார். அதுமட்டுமல்லாமல் காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். இதையடுத்து டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சியை கொடுத்தார் ஜஸ்பிரிட் பும்ரா. பும்ரா வீசிய 3வது பந்திலேயே குசல் பெரேரா டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு சிராஜ் மாபெரும் அதிர்ச்சியை இடியாக இறக்கினார். சிராஜ் வீசிய 4வது ஓவரில் முதல் பந்திலேயே நிஷாங்காவை 2 ரன்களில் வீழ்த்தினார்.
இதனால் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளா என்று இலங்கை ரசிகர்கள் சோகத்தில் அமர்ந்திருந்த நிலையில், அந்த ஓவரின் 3வது பந்தில் சமரவிக்ரமாவை வீழ்த்தி அடுத்தடுத்த அதிர்ச்சியை கொடுத்தார் சிராஜ். இதனால் இலங்கை அணி நிதானமாக ஆட நினைத்த நிலையில், அடுத்த பந்திலேயே அசலங்காவும் டக் அவுட்டாக, கடைசி பந்தில் நம்பிக்கை நட்சத்திரமான தனஞ்செயா டி சில்வாவை சிராஜ் வீழ்த்தினார்.
ஒட்டுமொத்தமாக 4வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் சாதனை படைத்தார். இதன் மூலம் மலிங்காவிற்கு பின் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல், ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்தார்.
இதனால் இலங்கை அணி 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கண்மூடி திறப்பதற்குள் என்ன நடந்தது என்று புரியாமல் இலங்கை ரசிகர்கள் மிரண்டு போயினர். ஆனால் இதற்கிடையே கேப்டன் ஷனகாவையும் சிராஜ் வீழ்த்தி அசத்த, 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சமிந்தா வாஸ் சாதனையும் சிராஜ் சமன் செய்தார்.
அதன்பின் மீண்டும் வந்த சிராஜ் குசல் மெண்டிஸையும் 17 ரன்களில் வீழ்த்த, இலங்கை அணி மொத்தமாக 50 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் நட்சத்திர பவுலர் சிராஜ் 7 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இதுதான் மிகச்சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது.