கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் தோனி. அவர் ஓய்வை அறிவித்து பல ஆண்டுகள் ஆன போதிலும் அவரது புகழ் சற்றும் மங்கவில்லை என்றே கூற வேண்டும். இந்திய அணிக்காக அனைத்து வகையான ஐசிசி டிராஃபிகளையும் அடித்துக் கொடுத்த இந்த ஜாம்பவானின் ஓய்வு அப்போது பலரையும் மனம் வருடம் செய்தது என்றே கூற வேண்டும்.
இந்திய அணிக்காக தோனி ஆற்றிய பங்கை அவ்வளவு எளிதில் யாரும் கடந்து போக முடியாது. என்னதான் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் தலையின் தரிசனம் ஐபிஎல் மூலமாக வருடம் ஒருமுறை அவரது ரசிகர்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் தோனி, சென்னை அணிக்காக இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்துள்ளார். அடுத்த வருடமும் அவர் நிச்சயம் ஐபிஎல்-இல் விளையாடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் அவரின் மூட்டு வலி விரைவில் குணமாக வேண்டும் என்பதும் ரசிகர்களின் பிரார்த்தனையாகவும் உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளரான முகமது அமீர், தோனி குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில் தோனியை நீங்கள் அவ்வளவு எளிதில் படித்து விட முடியாது. பொதுவாக ஒரு பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும் பொழுது அவருடைய முகத்தை கவனிப்போம்.
பேட்ஸ்மேன் அதிகப்படியான பிரஷரில் இருக்கிறாரா, அல்லது எந்த மன நிலையில் இருக்கிறார், அவருக்கு எது போன்ற பந்தை வீசினால் சரியாக இருக்கும் என்று கணிப்பதற்காக பேட்ஸ்மேன்களின் முகத்தை நாங்கள் பார்ப்பது வழக்கம்.
ஆனால் தோனியின் முகத்தை நாங்கள் பார்க்கும் போது அதில் எந்தவிதமான ஒரு மாறுதலும் இருக்காது. எப்பொழுதுமே அவர் முகத்தை ஒரே மாதிரியே வைத்திருப்பார். அதனால் அவருக்கு எது போன்ற பந்தை வீசுவது என்பது எங்களால் கணிக்கவே முடியாத ஒரு விஷயமாக இருக்கும்.
அவர் இதுவரை எத்தனையோ விடயங்களை சாதித்து விட்டார் அதற்கு மிக முக்கியமான காரணம் அவரது அமைதியும் பதட்டப்படாத மனநிலையும் தான் என்று நான் எண்ணுகிறேன். நிச்சயமாக இதுவரை உலகம் பார்த்திராத மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தோனி என்பதில் சந்தேகம் இல்லை என்று அமீர் தெரிவித்துள்ளார்.