தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வை அறிவிப்பாரா இல்லையா என்பதுதான். பல ரசிகர்கள் இதுதான் தோனியின் கடைசி சீசன் என்று நினைத்துக் கொண்டு சிஎஸ்கே போட்டிகள் எங்கு நடந்தாலும் தோனிக்காக மஞ்சள் ஆடை அணிந்து வந்து தங்கள் ஆதரவை சிஎஸ்கேவுக்கு தெரிவித்து வருகின்றனர். 41 வயதாகும் தோனி, தொடர்ந்து ஐபிஎல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு ரசிகர்களுக்கும் தோனிக்கும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட்டின் எவர் கிரீன் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தோனியிடம் தன்னுடைய சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கினார் என்பது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. இதெல்லாம் சேர்ந்து தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது சம்மந்தமாக ஸ்டார் ஸ்போர்ஸ்ட் கிரிக்கெட் லைவ்வில் பேசிய முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் “தோனி இதுதான் தனது கடைசி ஐ.பி.எல். என்று போதுமான குறிப்புகளை நமக்கு அளித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். அவர் கிரிக்கெட் உலகத்தை தனது ஓய்வு பற்றி யூகிக்க வைத்திருக்கிறார். அதுதான் அவரது இயல்பு.
ஆனால் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாட மாட்டார் என்றே எனது உள்ளுணர்வு சொல்கிறது. கவாஸ்கர் சார் வேறு எந்த கிரிக்கெட் வீரரிடமும் ஆட்டோகிராப் வாங்குவதை நாங்கள் பார்த்ததில்லை. சுனில் கவாஸ்கர் போன்ற ஒரு பெரியவர், தோனியிடம் இருந்து தனது சட்டையில் ஆட்டோகிராப் எடுத்துக்கொண்டது எம்எஸ் தோனியின் மகத்துவத்தைச் சொல்கிறது.” எனக் கூறியுள்ளர்.
2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார் தோனி. சென்னை அணிக்காக மட்டும் 200 போட்டிகளுக்கு மேல் அவர் கேப்டனாக இருந்து சாதனைப் படைத்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ள சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் “அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் என நம்புகிறேன்” என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.