இந்திய அணியில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து ஐந்து ஆண்டுகளான போதிலும் இன்னும் ஐபிஎல் தொடரில் மட்டும் தொடர்ந்து ஆடி வருபவர் தான் எம். எஸ். தோனி. கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர் இந்த முறை இளம் வீரர் ருத்துராஜிடம் அந்த பொறுப்பை கொடுத்துவிட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் கலந்து கொண்டு ஆடி வருகிறார்.
கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே தோனி ஓய்வினை அறிவித்து விடுவார் என்று பல்வேறு ஊகங்கள் இருந்து வரும் நிலையில் 43 வயதுக்கு மேல் ஆடிவரும் நிலையில் அடுத்த ஆண்டிலும் அவர் ஆட உள்ளார் என்பது தான் தற்போதைய செய்தியாக உள்ளது. தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே தரப்பில் தெரிவித்த கருத்துக்களின் படி அவர் அதை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இப்போதுள்ள நிலைக்கு நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் வீரராக களமிறங்குவார் என்று தான் குறிப்பிட்டிருந்தனர்.
இதனால் தோனியின் முடிவு அவரது கையிலே இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு வீரராக களம் இறங்குவாரா அல்லது ஓய்வினை அறிவித்துவிட்டு சென்னை அணியின் ஆலோசகர் அல்லது பயிற்சியாளராக செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ரசிகர்கள் தோனி இன்னும் ஒரு சில சீசன்களில் ஆடி விட்டு பின்னர் ஓய்வினை அறிவிக்க வேண்டும் என்றும் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஒரு வீரர் எப்போது ஓய்வினை அறிவிக்க வேண்டும் என தோனியிடம் கேட்ட போது அவர் தெரிவித்த பதில் என்ன என்பது பற்றி இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
“ஊடகங்கள் சேர்ந்து தோனியின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறது. ஆனால் அவரே நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிட்டார். ஒருமுறை நான் தோனியிடம் பேசிக் கொண்டிருந்தபோது எப்போது ஒரு வீரர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு, அவர் இரண்டு பதில்களை சொன்னார். ஒன்று, உங்களுக்கு எப்போது கிரிக்கெட் விளையாட்டு போரடிக்க தொடங்குகிறதோ, அதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் நேரத்திலேயே உங்களை அணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள்.
உங்களுக்கு எப்போது கிரிக்கெட் விளையாடும் போது ரசனை இல்லாமல் போகிறதோ அதுதான் உங்களுக்கான நேரம் வந்துவிட்டது என்பதற்கான சைகை. இதனால் நீங்களே சிறந்த தருணம் எது என்பதை நினைத்து ஓய்வு பெற வேண்டும். ஏனென்றால் உங்கள் உடல் அதற்கேற்ப நிச்சயம் ஆடுவதற்கு ஒத்துழைக்காது. அப்போதுதான் ஒரு வீரர் தனது நேரம் இது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்” என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.