சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரை நூலிழையில் இந்திய அணி தவற விட்டிருந்தது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வருத்தமடைய வைத்திருந்தது. 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மத்தியில் அகமதாபாத் மைதானத்தில் இறுதி போட்டியில் மோதி இருந்தது. இந்தியா தான் நிச்சயம் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலக கோப்பை கைப்பற்றும் என கூடியிருந்த ரசிகர்கள் நினைக்க, ஆஸ்திரேலிய அணி அதனை முற்றிலுமாக மாற்றி ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடையவும் செய்திருந்தனர்.
ஆனால் அதே வேளையில் இந்தியாவில் உள்ள பல வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை உலக கோப்பைத் தொடர் முழுக்க வெளிப்படுத்தினர். அதில் குறிப்பிடத்தக்க ஒரு வீரரின் ஆட்டம் என்றால் நிச்சயம் முகமது ஷமியின் பந்து வீச்சை சொல்லலாம். முதல் நான்கு போட்டிகளில் அணியில் இடம் கிடைக்காமல் இருந்த முகமது ஷமிக்கு ஹர்திக் பாண்டியா வெளியேறிய பின்னர் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் ஏழு போட்டிகளில் மட்டுமே களமிறங்கிய முகமது ஷமி, 24 விக்கெட்டுகளை கைப்பற்றி பல்வேறு சாதனைகளையும் உலகக் கோப்பை தொடரில் அடித்து நொறுக்கினார்.
அதிலும் மிகவும் முக்கியமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்தியாவின் கைவிட்டு போட்டி சென்ற போது அதை மீண்டும் தங்கள் பக்கம் திருப்பினார் ஷமி. இந்தியா தோற்ற போதிலும் முகமது ஷமியின் பங்களிப்பை அனைவரும் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் முகமது ஷமி உலகக் கோப்பை தொடரில் எப்படி விளையாடினார் என்பது குறித்து தற்போது தெரிய வந்த தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக கோப்பை தொடரிலிருந்தே முகமது ஷமியின் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் அதனை பெரிதுபடுத்தாமல் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் வலியுடனே பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றியதாகவும் தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் காயத்தின் காரணமாக அவர் தென்னாப்பிரிக்க தொடருக்கு தேர்வாகி உள்ள போதிலும் ஃபிட்னஸ் இருந்தாலே அவர் ஆட முடியும் என்றும் தகவல் குறிப்பிடுகிறது.
இந்திய அணிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உலக கோப்பையில் களமிறங்கிய முகமது ஷமியை பலரும் மனம் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.