இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி தங்களின் முதல் லீக் போட்டியிலேயே அமெரிக்க அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவ்வப்போது உலக கோப்பை தொடர்களில் நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட சிறிய சிறிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது.
அப்படி இருக்கையில், அமெரிக்காவை போன்று இன்னும் கிரிக்கெட் போட்டிகளை அதிகம் ஆடாத ஒரு அணி பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது, அதிக விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அமெரிக்க பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 159 ரன்கள் தான் எடுத்திருந்தது.
அமெரிக்காவில் உள்ள பிட்ச்கள் பெரிய அளவில் குழப்பமாகவே இருப்பதால் 150 ரன்கள் தாண்டியதனால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்று தான் அனைவருமே கருதினர். ஆனால் அமெரிக்க அணி ஆரம்பத்திலிருந்து சிறப்பான பேட்டிங்கை கையில் எடுத்ததால் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணியும் தடுமாற்றம் கண்டது.
சாஹீன் அப்ரிடி, அமீர், ஹாரிஸ் ராவுப் உள்ளிட்ட பல உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் அவர்களால் அமெரிக்கா அணியை எதுவும் பெரிய அளவில் செய்ய முடியவில்லை. இதனால் 159 ரன்களை அவர்களும் எடுக்க, தொடர்ந்து சூப்பர் ஓவர் போட்டியிலும் அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றியை பெற்றிருந்தது.
இந்த தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வியடையும் சூழல் உருவானால் நிச்சயமாக லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை உருவாவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக அமெரிக்கா கேப்டன் மோனாங்க் படேல் சொன்ன விஷயம் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டிக்கு முன்பாக பேசியிருந்த மோனாங்க் படேல், ‘பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு 30 முதல் 40 நிமிடங்கள் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை ஆடினால் நிச்சயம் நாங்கள் அவர்களை வீழ்த்துவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது’ என தெரிவித்திருந்தார்.
அவர் சொன்னதைப் போலவே பாகிஸ்தான் பேட்டிங் செய்ய வந்ததும் விக்கெட்டுகள் எடுத்து ஆரம்பத்திலேயே போட்டியை கட்டுப்பாட்டில் வைத்ததுடன் ஆட்டநாயகன் விருதை கேப்டன் மோனாங்க் படேல் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.