இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசியின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 48 போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள 10 வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், கடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்தி அணியும் அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத் நகரில் மோத இருக்கின்றன.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்தான பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்ற இயான் மோர்கன் எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடர் குறித்த சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில் எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்போகும் வீரர் குறித்து பேசிய மோர்கன் கூறுகையில் : என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்டலரே இருப்பார்.
ஏனெனில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்போது அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அவரது ஆட்டம் பிரமாதமாக உள்ளது. உலககோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் சிறப்பாக இருப்பதனால் அவர் இந்த ஆண்டு அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது என மோர்கன் கூறினார்.
மேலும் இந்த தொடரில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் விளையாடப்போகும் அணி குறித்து பேசிய மோர்கன் கூறுகையில் : இந்த உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தப்போகும் அணியாக நான் பாகிஸ்தான் அணியை பார்க்கிறேன். ஏனெனில் பாகிஸ்தான் அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர்.
சாதாரணமான தொடர்களில் வீரர்களுக்கு இடையே ஒரு போட்டி இருக்கும். அதேபோன்று தற்போது உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் சாதாரணமான செயல்பாட்டை விட இன்னும் அதிகளவு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புவார்கள் என்பதனால் பாகிஸ்தான அணி இம்முறை அனைத்து அணிகளுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் அணியாக இருக்கும் என இயான் மோர்கன் பேசியது குறிப்பிடத்தக்கது.